ஈஷா யோகா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா கொண்டாட்டம்.. அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

கோவை: ஈஷா யோகா மையத்தில் இன்று மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது.. இந்த விழாவில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். இன்று மாலை 6 மணிக்கு துவங்கும் சிவராத்திரி விழா, நாளை காலை 6 வரை நடைபெறுகிறது.


ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன் இன்று மாலை 6 மணிக்கு மகாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. இது நாளை காலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
முக்கிய தலைவர்கள் சிவராத்திரி விழாவில் பங்கேற்பு ஈஷா நிறுவனர் சத்குரு முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில், தியானங்கள், மந்திர உச்சாடனைகள், தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சிறப்பு விருந்தினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவகுமார் பங்கேற்கின்றனர். ஈஷா யோக மையத்தின் இந்த 31வது மகா சிவராத்திரி விழாவில், ஒடிஸா ஆளுநர் ஹரிபாபு, பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த்ட் கட்டாரியா, மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய செய்தி ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா அமைச்சர் சஞ்சய் ராதோட் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
திரைப்பட பிரபலங்களும் பங்கேற்பு அதேபோல திரைத்துறையை சேர்ந்த சந்தானம், தமன்னா, விஜய் வர்மா, இயக்குனர் ஓம் பிரகாஷ் மெஹ்ரா உள்ளிட்டவர்களும் கலந்து கொள்கின்றனர். இதில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சத்யபிரகாஷ், கர்நாடகாவை சேர்ந்த பாடகி சுபா ராகவேந்திரா, தனிஷ் சிங், மராத்தி இசை சகோதரர்கள் அஜய்-அதுல், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் முக்திதான் காத்வி, ஜெர்மன் பாடகி கசான்ட்ரா மே ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. புதிய ஆப் அறிமுகம் இவ்விழாவில், “மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்” எனும் இலவச செயலியை சத்குரு அறிமுகப்படுத்த உள்ளார். தினமும் 7 நிமிடங்கள் சத்குருவின் வழிகாட்டுதலுடன் மக்கள் தியானம் செய்யும் வகையில் இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவுக்கு முன்பதிவின்றி நேரடியாக வரும் மக்கள் இலவசமாக கலந்து கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகா சிவராத்திரி விழா தமிழகத்தில் 50 இடங்கள், கேரளாவில் 25 இடங்கள் உட்பட நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.
150-க்கும் அதிகமான தொலைக்காட்சி சேனல்கள், டிஜிட்டல் தளங்களிலும், இந்தியா முழுவதும் 100-க்கும் அதிகமான திரையரங்குகளிலும், ஜியோ ஹாட்ஸ்டார், ஓடிடி தளங்கள், வானொலிகளிலும் விழா நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. ஹைகோர்ட் அனுமதி முன்னதாக, ஒலி மாசு ஏற்படும் வகையில் மகா சிவராத்திரி விழா நடத்தப்பட்டு வருவதாகவும், இதற்கு தடை விதிக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், மனுவை ஏற்க எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.. அத்துடன், கழிவுநீர் மேலாண்மை, ஒலி மாசுவை தவிர்க்க ஈஷா யோகா மையத்துக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.