எஸ்பி வேலுமணி வீட்டு திருமணம்.. அண்ணாமலையை சிரித்த முகத்துடன் கைகுலுக்கி வரவேற்ற அதிமுக நிர்வாகிகள்!

கோவை: அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி இல்லத் திருமண விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அதேபோல் திருமண நிகழ்ச்சியில் இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களையும் சந்தித்த அண்ணாமலை, அவர்களுடன் கைகுலுக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
2019 நாடாளுமன்றத் தேர்தல் முதல் தமிழ்நாட்டில் அதிமுக – பாஜக கூட்டணி இணைந்தது. அதன்பின் 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்த நிலையில், பாஜக தரப்பில் போட்டியிட்ட 4 பேர் வெற்றிபெற்றனர். இதன் மூலமாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீண்ட இடைவேளைக்கு பின் பாஜக உறுப்பினர்கள் கால் பதித்தனர்.

ஆனால் உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் அதிமுக – பாஜக கூட்டணி இணையவில்லை. அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்த நிலையில், இன்னொரு பக்கம் பாஜக, பாமக, அமமுக மற்றும் ஓபிஎஸ் உள்ளிட்டோர் கூட்டணியாக உருவாகினர். இருப்பினும் திமுக கூட்டணியே அனைத்து இடங்களிலும் வெற்றிபெற்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே உள்ளது. ஏற்கனவே திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், மற்ற கட்சிகளும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவில் தொடங்கவுள்ளனர். இதனிடையே சில நாட்களுக்கு முன்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா கோவை வந்தார். கோவை ஈஷா மையத்தில் நடைபெற்ற சிவராத்திரி விழாவில் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியும் பங்கேற்றார். இதனிடையே எஸ்பி வேலுமணி சில வாரங்களுக்கு முன்பாக டெல்லி சென்று பாஜகவின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு வந்ததாக தகவல் கிடைத்தது.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு பின் கொங்கு மண்டலத்தில் அதிக செல்வாக்கு உடையவர் எஸ்பி வேலுமணி தான். இதனால் எஸ்பி வேலுமணி மூலமாக எடப்பாடி பழனிசாமியை அணுக பாஜக முயற்சிப்பதாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கோவையில் எஸ்பி வேலுமணியின் மகன் விஜய் விகாஸ்-க்கும், மணமகள் சிடி தீக்‌ஷனாவுக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும், அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். அந்த வகையில் பாஜக தரப்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி இருக்கின்றனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக – பாஜக இடையில் எந்தவித மோதலும் இல்லை. கல்வி நிதிக்கான பிரச்சனையின் போது கூட எடப்பாடி பழனிசாமி பாஜகவிடம் வேண்டுகோள் வைத்திருந்தார். பாஜகவுக்கு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. இதனால் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக – பாஜக கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.