மருதமலை முருகன் கோயில் கும்பாபிஷேகம்.. போக்குவரத்தில் வரும் முக்கிய மாற்றம்.. நோட் பண்ணுங்க மக்களே!

கோவை: தமிழ்க் கடவுள் முருகனின் ஏழாம் படைவீடு என்று அழைக்கப்படும் கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்ரல் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த வழியாக செல்லலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.


ரம்மியமான கோவையின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் ஏழாம் படைவீடு என்று அழைக்கப்படும் இக்கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம். இக்கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி கேரள மாநிலத்தில் இருந்தும், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் என தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள்.
விஷேச நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் இங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மருதமலையில் அமைந்துள்ள முருகன் கோவிலை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதியாகும். தைப்பூசம் அன்று மட்டும் கிட்டத்தட்ட 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மருதமலையில் முருகன் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்டிகை, விஷேச தினங்கள், விடுமுறை நாட்கள் ஆகியவற்றின்போது கோயில் நிர்வாகம் சார்பில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4 ஆம் தேதி கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. எனவே, வாகனங்கள் வடவள்ளி, தொண்டாமுத்தூர், கல்வீரம்பாளையம் வழியாக மருதமலைக்கு வரலாம் எனவும், பாரதியார் பல்கலைக்கழகம் வரை மட்டும் பேருந்துகள், வாகனங்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருந்து திரும்ப செல்ல இடையர்பாளையம் வடவள்ளி தொண்டாமுத்தூர் வழியை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து கோவை மாநகர காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கோவை அருள்மிகு மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா 04.04.2025-ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு கருதி போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி திருக்கோவிலுக்கு வாகனங்களில் மருதமலை வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வடவள்ளி, தொண்டாமுத்தூர் சந்திப்பு வழியாக மகாராணி அவென்யு, சின்மயா வித்யாலயா கடந்து சென்று அஜ்ஜனூர் பிரிவில் வலது புறம் திரும்பி, கல்வீரம்பாளையம், மருதமலை ரோடு சந்திப்பை அடைந்து இடது புறம் திரும்பி பாரதியார் பல்கலைக்கழகம் வரை மட்டுமே பேருந்துகள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்படும். அங்கிருந்து மலைமேல் வாகனங்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து திரும்பி வரக்கூடிய வாகனங்கள் மருதமலை ரோடு, கல்வீரம்பாளையம் சந்திப்பு, நவாவூர் பிரிவு, வடவள்ளி ரவுண்டானாவில் இருந்து இடதுபுறம் திரும்பி இடையர்பாளையம் சந்திப்பு வழியாகவும், வடவள்ளி தொண்டாமுத்தூர் சந்திப்பு வந்து தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி வழியாகவும் மாநகருக்குள் செல்ல வேண்டும். இந்த போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பை அளிக்குமாறு கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.