மாஸ்டர் பிளான் சொதப்பல்! நில வகை மாற்றத்தால் பரவலாக கடும் அதிருப்தி

கோவை: கோவை மாஸ்டர் பிளான்-2041ல், நில வகைப்பாடுகள் தடாலடியாக மாற்றப்பட்டு இருப்பதால், தொழில்துறையினர், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே இருந்த நில வகைபாடுகளே தொடர வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.நகரின் எதிர்கால வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு, கோவைக்கான முதல் ‘மாஸ்டர் பிளான்’ 1994ல் வெளியிடப்பட்டது. கோவை உள்ளூர் திட்டக்குழுமம், பழைய கோவை மாநகராட்சி பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கி, 1,287 சதுர கி.மீ. பரப்புக்கு எல்லை வரையறை செய்யப்பட்டு இருந்தது.

தற்போது கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 1,531 சதுர கி.மீ. பரப்புக்கு விரிவுபடுத்தி, ‘மாஸ்டர் பிளான்-2041’ தயாரிக்கப்பட்டது. பிப்ரவரி 11-ல் வரைவு ‘மாஸ்டர் பிளான்’ வெளியிடப்பட்டது. ஆலோசனை, ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.

விவசாயிகள், தொழில் அமைப்புகள், சமூக பொது நல அமைப்புகள், கட்டுமானத் துறையினர் மற்றும் தனி நபர்கள் என, 3,100 மனுக்கள் பெறப்பட்டன.

பரிசீலனைக்கு பின் ஜூலை 3ல் இறுதி வரைவு வெளியிடப்பட்டது. ”இதில், ஏராளமான தவறுகள் இருக்கின்றன; திட்ட சாலைகள் நீக்கப்பட்டுள்ளன; நிலங்கள் வகைப்பாடு மாற்றப்பட்டுள்ளது” என தொழில்துறையினர் மற்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.

உதாரணத்துக்கு, கோவை – திருச்சி சாலை, அவிநாசி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில், 80 அடி அகலத்தில் திட்டமிட்டிருந்த வட்டச்சாலை (ரிங் ரோடு) திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
துடியலுார் – குனியமுத்துார் இடையிலான, 150 அடி அகல உள்வட்டச்சாலை (இன்னர் ரிங் ரோடு), வெள்ளக்கிணறு-நீலாம்பூர் 80 அடி உள்வட்டச்சாலை, நகரின் முக்கியச்சாலைகளை இணைக்கும் பசுமை வழித்தடம் ஆகியவை கைவிடப்பட்டுள்ளன.

முதல் மாஸ்டர் பிளானில், 257 திட்ட சாலைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில், 58 சாலைகள் அமைக்கப்பட்டதாகவும், 53 சாலைகள் இனிமேல் அமைய உள்ளதாகவும், 136 சாலைகளை அமைக்க சாத்தியமில்லை என்றும் மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், குடியிருப்பு பகுதிகளாக இருந்த இடங்களை, தொழிற்சாலை மற்றும் விவசாயப் பகுதிகளாக வகை மாற்றம் செய்துள்ளனர்.

இப்பகுதியில் இனி வீடு கட்ட வேண்டுமெனில், நகர ஊரமைப்பு துறைக்கு விண்ணப்பித்து, வகை மாற்றம் செய்ய வேண்டும். இதற்கு சென்னை வரை அலைச்சல் ஏற்படும்; செலவுகள் அதிகரிக்கும்.

கட்சி சார்பற்ற விவாசாயிகள் சங்க மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறுகையில், ”கோவையில் நில மதிப்பு அதிகமாக உள்ளதால் இம்மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நில வகை ஏற்கனவே எப்படி இருந்ததோ அதேபோல் தொடர வேண்டும்,” என்றார்.

விரைவில் அலுவலகம் வரும்

கலெக்டர் பவன்குமார் கூறுகையில், ”கோவை நகர்ப்புற வளர்ச்சிக்குழும அலுவலகம் அமைப்பதற்கு பூர்வாங்கப்பணி நடந்து வருகிறது. அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடக்கிறது. விரைவில் அலுவலகம் அமைக்கப்படும்,” என்றார்.