கவுன்சிலரை சஸ்பெண்ட் செய்த காரணமே வேறு என்கிறார் மேயர்

கோவை; கோவை மாநகராட்சி சார்பில், 16 இடங்களில் உள்விளையாட்டு அரங்கங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்கு வருவோரிடம் மாதந்தோறும், 75 ரூபாய் கட்டணம் வசூலிக்க, ஜூன் மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர். இதையடுத்து அ.தி.மு.க., தி.மு.க. கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அ.தி.மு.க. கவுன்சில் குழு தலைவர் பிரபாகரன், இரு கூட்டங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதனால், ஜூலையில் நடந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.ஆனால், ஜூலை மாத கூட்டத்தில், கவுன்சிலர்களின் கோரிக்கை மற்றும் அமைச்சரின் பரிந்துரைக்கேற்ப, உள்விளையாட்டு அரங்கத்துக்கு கட்டணம் வசூலிக்கும் தீர்மானத்தை ரத்து செய்வதாக, சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால், அ.தி.மு.க., கவுன்சிலர் மீது எடுக்கப்பட்ட ‘சஸ்பெண்ட்’ நடவடிக்கை ரத்தாகுமா என்கிற எதிர்பார்ப்பு எழுந்தது.

மேயர் ரங்கநாயகியிடம் கேட்டபோது, ”மாமன்ற கூட்டத்தில் பிரபாகரன் மட்டுமே கேள்வி கேட்டுக் கொண்டிருப்பார். சபை நடவடிக்கையை தொடர விடாமல், கோஷம் எழுப்பியதால், சஸ்பெண்ட் செய்தோம்; உள்விளையாட்டு அரங்கம் தீர்மானத்துக்காக அல்ல. விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, உள்விளையாட்டு அரங்கத்துக்கான கட்டணத்தை ரத்து செய்தோம்,” என்றார்.