சாலையில் வீசப்படும் இறைச்சி கழிவுகள்; விவசாயிகள் கூட்டத்தில் புகார்

அன்னுார்; ‘நாட்டுக்கோழி பண்ணை அமைக்க, 1.50 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது,’ என கால்நடை பராமரிப்பு துறை தெரிவித்தது.வேளாண்துறை, ‘அட்மா’ திட்டம் சார்பில், அன்னுார் வேளாண் அலுவலகத்தில் விவசாயிகளின் வட்டார ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. மேலாளர் லோகநாயகி வரவேற்றார்.

வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் கீதா பேசுகையில், தோட்டத்தில் விவசாய மின் இணைப்பு இல்லாதவர்களுக்கு சோலார் மோட்டார் பொருத்த மானியம் வழங்கப்படும்.வனவிலங்குகளின் தொல்லையிலிருந்து பாதுகாக்க 100 சதவீத மானியத்தில் மின் வேலி அமைக்கலாம். கிணறு தோண்ட அதிகபட்சமாக, 2.5 லட்சம் ரூபாய் மானியம் தரப்படும். இவற்றிற்கு வேளாண் பொறியியல் துறையில் விண்ணப்பிக்கலாம், என்றார்.

பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசுகையில், பட்டுப்புழுக்களுக்கு தேவையான மல்பெரி நடவு செய்ய ஏக்கருக்கு 45 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. பட்டுப்புழு வளர்க்க 1100 சதுர அடி கொட்டகை அமைக்க 2 லட்சத்து 43 ஆயிரத்து 750 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. அன்னுார் பட்டு வளர்ச்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், என்றார்.

விவசாயிகள் பேசுகையில், ‘கோழி கழிவுகளை ,பண்ணையாளர்களும் இறைச்சிக்கடை உரிமையாளர்களும் சாலை ஓரத்தில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் நாய்கள் அதிகரித்து விட்டன. ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை கடிக்கின்றன. பன்றிகள், மயில்கள் ஆகியவற்றின் தொல்லையிலிருந்து தப்பிக்க சோலார் மின்வேலி அமைத்து தர வேண்டும். பல குளம் குட்டைகளுக்கு அத்திக்கடவு நீர் வரவில்லை.

நீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அன்னுாரில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்,’ என்றனர்.