அங்கீகாரம் இல்லாமல்  செயல்படும் மருத்துவ கல்லுாரி; கேள்விக்குறியான மாணவர்களின் எதிர்காலம் 

கோவை; கோவை கிணத்துக்கடவு, கொண்டம்பட்டியில் செயல்படும் மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிடியூட் கல்லுாரி எவ்வித அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.மகாராஜா ஹெல்த் இன்ஸ்டிடியூட் கல்லுாரியில், 18 மருத்துவம் சார்ந்த அலைடு படிப்புகளில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ராஜஸ்தான் சன்ரைஸ் பல்கலையின் அங்கீகாரம் பெற்று செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், விதிமுறைப்படி எல்லை தாண்டி பல்கலைகள் கல்லுாரிகளை கட்டுப்படுத்த இயலாது.இக்கல்லுாரியில், தேர்வுகள் முறையாக நடத்தப்படவில்லை, முதலாமாண்டில் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடவில்லை, அடையாள அட்டையில் கல்லுாரி பெயர் குறிப்பிடப்படவில்லைஎன்று பல்வேறு புகார்கள் மாணவர்களால் முன்வைக்கப்பட்டு கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு கடந்த ஜூலை மாதம் அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக்கல்லுாரி டீன் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சுகாதாரத்துறை சார்பில் கல்லுாரியில் நேரடியாக கடந்த வாரம் ஆய்வுகள்மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின் முடிவு, அறிக்கை கலெக்டர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தற்போது, தகவல்களை வெளியிட இயலாது, என்றார்.மாவட்ட நிர்வாகம் தாமதிக்காமல் உடனடியாக நடவடிக்கை எடுத்து உரிய தீர்வை வழங்கவேண்டும் என, கல்லுாரி மாணவர்கள் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கை

இதுகுறித்து, மாவட்ட கலெக்டரிடம் கேட்டபோது, ” கல்லுாரி தரப்பில் இருந்து சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகளை, மருத்துவ கல்வி இயக்குனரக ஆலோசனையின் பேரில் சரிபார்க்கப்படுகிறது. கோப்புகளில் தவறுகள் கண்டறியபட்டால், உண்மைத்தன்மை இல்லை என்பது தெரிந்தால் வழக்கு பதிவு செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், ” என்றார்.