சூலுார்:”புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் உழைப்பு, இந்திய பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது,” என, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசினார்.கோவை மாவட்டம், அரசூரில் உள்ள கே.பி.ஆர்., மில்லில், 1,000க்கும் மேற்பட்ட, ஒடிசா மாநில பெண் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு உயர்கல்வி பயிலும் வசதியும் இங்கு உள்ளது.

இந்நிலையில், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், அப்பெண் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒடிசா மாநிலத்தில் எந்தெந்த பகுதியில் இருந்து வந்துள்ளனர் என்பதையும், ஆலையில் உள்ள வசதிகள், பாதுகாப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
அவர் பேசியதாவது:
தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்று தொழில் செய்வோர், ஒடிசா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மற்ற மாநிலங்களுக்கு புலம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும், இந்திய பொருளாதார வளர்ச்சிக்காக, தங்கள் உழைப்பை தருகின்றனர்.அவர்களின் உழைப்பு பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தை, பெற்றோருக்கு ‘ஜி பே’ வாயிலாக அனுப்புவது, பிரதமர் மோடியின், டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது.
மாநிலங்களை கடந்து வந்து கடினமாக உழைக்கும் ஒவ்வொருவரும், நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் பணியில் முக்கிய பங்காற்றுகின்றனர்.
தமிழகத்தை சார்ந்தோர், ஒடிசாவில் தொழிற்சாலைகள் நிறுவ முன் வரவேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
பனியன் நிறுவனங்களில் ஆய்வு
திருப்பூர் அருகே நியூ திருப்பூரில் உள்ள நேதாஜி அப்பேரல் பார்க் தொழிற்பேட்டையிலுள்ள நிறுவனங்களை பார்வையிட்ட மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது: கோவையிலுள்ள தொழில் நிறுவனங்கள் மற்றும் திருப்பூரில் இயங்கும் பனியன் நிறுவனங்களை ஆய்வு செய்கிறோம். இதில், சிறிய உற்பத்தி நிறுவனங்கள் முதல் ஸ்பின்னிங் மில்கள், நிட்டிங், எம்ப்ராய்டிங் என அனைத்தையும் பார்வையிடுகிறோம்.
என் சொந்த தொகுதியான ஒடிசா மாநிலம், சம்பல்பூருக்காக, இங்குள்ள தொழில் நிறுவனங்கள் நிலையை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.கோவை மற்றும் திருப்பூர், ஒடிசாவுடன் நேரடி தொடர்பில் உள்ளது. ஒடிசா இளைஞர்கள் அதிகளவில் இங்கு வேலை செய்கின்றனர். நாட்டின் பொருளாதாரத்திலும் தமிழகத்தின் பொருளாதாரத்திலும் அவர்கள் பங்கு வகிக்கின்றனர். இங்கு அவர்கள் கற்றுக் கொண்ட அனுபவங்களை பற்றி கேட்டறிந்தேன். ஒடிசாவில் வேலை வாய்ப்பை பெருக்கவும், பொருளாதாரத்தை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, அமைச்சர் கூறினார்.
Leave a Reply