பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் நவீன சமையலறை! கட்டுமானம், இயந்திரம் நிறுவுதல் தீவிரம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நீராவி சமையல் கூடம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இப்பணிகள் முடிந்ததும் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என, மருத்துவமனை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கடந்த, 2009ம் ஆண்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.அதில், 462 உள்நோயாளிகளும், தினமும், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநோயாளிகளும் சிகிச்சை பெறுகின்றனர்.

இங்கு உள்நோயாளிகளுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில், காலையில் பொங்கல், சாம்பார், பால், மதியம் சாதம், சாம்பார், மோர், கீரை, மாலையில் சுண்டல், பழம், இரவில் உப்புமா வழங்கப்படுகிறது.

செவ்வாய், வியாழன், சனி ஆகிய நாட்களில் காலையில் இட்லி, சாம்பார், பால், ஞாயிறு காலை பொங்கல், சாம்பார் மற்றும் பால், இரவு, சாதம், ரசம் போன்றவையும் வழங்கப்படுகிறது. மதியம் மற்றும் மாலையில் அனைத்து நாட்களும் ஒரே மாதிரியான உணவு வழங்கப்படுகிறது. இதற்காக, காஸ் அடுப்புகளில் சமைத்து நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. ஒரு நாளுக்கு, 462 பேருக்கு சமைத்து உணவு வினியோகம் செய்யப்படுகிறது.

குறுகலான சமையலறையை விரிவாக்கம் செய்து, போதுமான வசதிகளை மேம்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்திடமும், அரசு மருத்துவமனை நிர்வாகம் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

இந்நிலையில், வால்பாறைக்கு நீராவி சமையல் கூடம் அமைக்க உபகரணங்கள் வழங்கப்பட்டன. அங்கு போதிய உள்நோயாளிகள் இல்லாததால், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அங்கு ஒதுக்கப்பட்ட நீராவி சமையல் கூடத்துக்கான உபகரணங்கள், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன.
பொள்ளாச்சி சமையல் கூடம் அருகே செயல்பட்ட, ‘டயாலசிஸ்’ பிரிவு வேறு கட்டடத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த இடம் சுத்தம் செய்யப்பட்டு, காய்கறிகள் நறுக்குதல், சமையலுக்கேற்ப மாற்றம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா கூறியதாவது:

அரசு மருத்துவமனையில், சமையல் கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, நவீன சமையலறையாக மாற்றப்படுகிறது. உள்நோயாளிகள், குழந்தைகள், பிரசவத்துக்காக வரும் கர்ப்பிணிகளுக்கு உணவுகள் வழங்கப்படுகின்றன.

தற்போது, காஸ் பயன்படுத்தி சமையல் பணிகள் நடக்கிறது. தற்போது மேற்கொள்ளப்படும் பணிகள் நிறைவடைந்ததும், நீராவி இயந்திரம் வாயிலாக சமைக்கப்பட உள்ளது. இதற்கான இயந்திரங்கள் வந்துள்ளன. இதன் வாயிலாக, ஒரே நேரத்தில், 150 இட்லி சமைக்க முடியும். உணவு சூடாக இருப்பதுடன், சுகாதாரமாக பாதுகாக்க முடியும்.

கட்டடம் புதுப்பிக்கும் பணிகள், 25 லட்சம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பணிகள் முடிந்ததும், இயந்திரங்கள் பொருத்தப்படும். ஆக., மாதத்துக்குள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு நவீன சமையலறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

கூடுதல் ஆட்கள் தேவை!

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், சமையல் பணிகளில் தற்போது, இரண்டு பேர் ஈடுபட்டு வருகின்றனர். நீராவி இயந்திரங்கள் வாயிலாக உணவு சமைக்கும் போது, கூடுதலாக, இரண்டு பேர் தேவைப்படுவர். அரசு கூடுதலாக ஆட்கள் நியமிக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும், என, நோயாளிகள் நலச்சங்கத்தினர் எதிர்பார்க்கின்றனர்.