கோவை; தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் செருப்பு, ஷூ, கால் அளவுக்கு ஏற்ப வழங்காமல், சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ உள்ளதால், பரவலாக பயன்படுத்தப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. இதனால் இத்திட்டத்தின் நோக்கம் கேள்விக்குரியதாகிறது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு செருப்பு, ஆறு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஷூ இலவசமாக வழங்கப்படுகிறது.கோவையில் மட்டும், 71,994 செருப்புகள், 1,78,061 ஷூக்கள் வழங்கப்பட்டன. கருப்பு மற்றும் பச்சை நிறங்களில், 7,12,244 இரண்டு ஜோடி சாக்ஸ் வழங்கப்பட்டன.

சைஸ் பத்தலை மாணவ, மாணவியரின் கால் அளவுக்கு ஏற்ப இல்லாததால், அனைவராலும் பயன்படுத்த முடிவதில்லை. கால் அளவு பெரிதாக இருப்பவர்கள், அடுத்தாண்டு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில், வீட்டில் வைத்திருக்கின்றனர்.சிறிய அளவு கிடைத்தவர்கள், பயன்படுத்த முடியாமல் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பயன்படுத்த முடியாத செருப்புகளை, அக்கம் பக்கத்தில் வசிக்கும் சிறுவர்களுக்கு வழங்கி விடுவதாக, சில மாணவர்கள் கூறுகின்றனர்.
பெரும்பாலான துவக்கப்பள்ளிகளில், மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்லும்போது செருப்புகளை வெளியே விட்டுச் செல்கின்றனர். ஒரே நிறத்தில் இருப்பதால், மாறி விடுகிறது. அரசு வழங்கிய செருப்புகளை அணியாமல் தவிர்ப்பதற்கு, இதுவும் ஒரு காரணம்.
கண்காணிக்க வேண்டும் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘சில ஆண்டுகளுக்கு முன், ‘இல்லம் தேடி கல்வி’ திட்ட தன்னார்வலர்கள் வாயிலாக, ஒவ்வொரு மாணவனின் கால் அளவும் எடுக்கப்பட்டது. மீண்டும் அளவு சரிபார்க்காமல், பழைய பதிவுகளின் அடிப்படையில், செருப்பு மற்றும் ஷூக்கள் வழங்குவதே இப்பிரச்னைக்கு காரணம். அளவு சரியாக இல்லாததால், மாணவர்களால் பயன்படுத்த முடியவில்லை; அவர்களுக்கு முழு பலன் கிடைக்கவில்லை’ என்றனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘செருப்பு மற்றும் ஷூக்கள் தயாரித்து வழங்க, தனியார் நிறுவனத்துக்கு டெண்டர் விடப்படுகிறது. சரியான அளவுகளில், தரமாக தயாரித்து வழங்கப்படுகிறதா என்பதை, அரசு கண்காணிக்க வேண்டும்’ என்றனர்.
Leave a Reply