யானை இறப்பில் மர்மம்; வனத்துறை விசாரணை

வால்பாறை; கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், சாலக்குடியில் இருந்து, வால்பாறை வரும் வழித்தடத்தில் உள்ள அதிரப்பள்ளி அருகே யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. பகல் நேரத்தில் உணவு மற்றும் தண்ணீரை தேடி யானைகள் ரோட்டை கடக்கின்றன. இந்நிலையில், அதிரப்பள்ளி அருகே காலடி பகுதியில், தோட்டத்தில் உள்ள நீரோடையில் 10 வயது பெண் யானை மர்மமான முறையில் இறந்து கிடந்தது.அங்கு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வாளச்சால் டி.எப்.ஓ., சுரேஷ்பாபு தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த யானையை அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களாகவே அதிரப்பள்ளி ரோட்டில் யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

இடையிடையே யானைகள் விவசாய தோட்டங்களையும் சேதப்படுத்துகின்றன.

இந்நிலையில், மர்மமான முறையில் யானை நீரோடையில் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளோம். பரிசோதனையின் முடிவில் யானை இறப்புக்கான உண்மை காரணம் தெரியவரும்,’ என்றனர்.