MyV3 மோசடி: பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம்.. கோவை மாநகர போலீஸ் அறிவுறுத்தல்

கோவை: செல்போனில் விளம்பரம் பார்த்தால் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம் என்று ஆசைக்காட்டி மை வி3 என்ற நிறுவனம் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த மை வி3 செயலியில் பணம் கொடுத்து ஏமாந்த நபர்கள் புகார் அளிக்கலாம் என்று மீண்டும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு புகார் அளிக்க காவல்துறை கேட்டுக் கொண்டதை அடுத்து மீண்டும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

உட்கார்ந்த இடத்தில் இருந்து லட்சங்களில் சம்பாதிக்கலாம். செல்போனில் விளம்பரம் மட்டும் பார்த்தால் போதும் என்று கவர்ச்சிகர அறிவிப்பை வெளியிட்டது மை வி3 நிறுவனம். இந்த நிறுவனத்தை நம்பி ஏராளமான மக்கள் தங்களது பிஎஃப் பணம், நகையை அடகு வைத்து கூட இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். தங்களுக்கு கீழ் நபர்களைச் சேர்ப்பதன் மூலம் கூடுதல் வருமானத்தைப் பெறலாம் என்பதால் ஏராளமான மக்கள் அதில் சேரவும், மற்றவர்களை சேர்த்துவிடவும் செய்தனர்.

செல்போனில் விளம்பரம் பார்த்தால் வருமானம் என்று கூறி பொதுமக்களை மோசடி செய்ததாகவும், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் பல்வேறு நோய்களுக்கு மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் மீது கடந்த ஆண்டு கோவை மாநகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையடுத்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக பொய் புகார் அளிக்கப்பட்டதாக கூறி 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் நீலாம்பூரில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த விஜயராகவன் வி3 ஆன்லைன் டிவி, மைவி3 ஆட்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களைத் தொடங்கி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார்கள் எழுந்தன. அதேபோல, கோவை வெள்ளக்கிணறு பகுதியைச் சேர்ந்த சக்தி ஆனந்தன் என்பவர் மீதும் மோசடி புகார் எழுந்தது. இதையடுத்து விஜயராகவனை காவல் துறையினர் கைது செய்தனர்.