கோவை; கோவை மாநகராட்சி சார்பில், ‘நம்ம கோவை சிட்டிசன் செயலி’ நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இனி, மாநகராட்சி தொடர்பான சேவைகளை செயலியில் பதிவிட்டு, எளிதாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது மொபைல் போனில், இணைய தளம் வழியாக, ‘ப்ளே ஸ்டோரில், nammakovaicitizen app என்கிற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தங்கள் வார்டுகளில் ஏதேனும் பிரச்னை இருப்பின், செயலியில் பொதுமக்கள் பதிவேற்றம் செய்யலாம். தன்னார்வலர்கள் நகர மேம்பாட்டுக்கு தங்களை இணைத்துக் கொள்வதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி அலுவலகங்கள், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், விமான நிலையங்கள், மருத்துவமனைகள், பொது கழிப்பிடங்கள், போலீஸ் ஸ்டேஷன்கள், தீயணைப்பு நிலையங்கள், கல்யாண மண்டபங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், விடுதிகள், அஞ்சலகங்கள், மின்வாரிய அலுவலகங்கள், விளையாட்டு மைதானங்கள், மயானங்கள், உடற்பயிற்சி கூடங்கள், வாகன நிறுத்துமிடங்கள் போன்ற தகவல்களை பெறலாம். இவ்விடங்களுக்கு செல்வதற்கு வழிகாட்ட, கூகுள் மேப் வசதி இணைக்கப்பட்டிருக்கிறது.
சொத்து வரி செலுத்தவும், பிறப்பு – இறப்பு பதிவு போன்ற இணைய தளங்களை அணுகுவதற்கான ‘லிங்க்’ வழங்கப்பட்டுள்ளது. கட்டட வரைபட அனுமதி பெற விண்ணப்பிக்கலாம். மாநகராட்சிக்கு சொந்தமான சமுதாய கூடங்களில் நிகழ்ச்சி நடத்த முன்பதிவு செய்யலாம். எங்கெங்கு வரி வசூல் மையங்கள் செயல்படுகின்றன என்கிற விபரம் இருக்கிறது. மாநகராட்சி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்கள், கோவில்கள் பற்றிய தகவல்கள் இன்னும் முழுமையாக பதிவேற்றம் செய்யப்படவில்லை. இச்செயலியை, கோவையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, அறிமுகப்படுத்தினார்.
Leave a Reply