நீட் தேர்வு, 7.5 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமானது டாக்டராகும் கனவு: மாணவர்களின் கருத்து

நீட் தேர்வுடன், 7.5 சதவீத இடஒதுக்கீடும் இருப்பதால், ஏழை மாணவர்களுக்கு மருத்துவ கல்வி சாத்தியமாகி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, நீட் தேர்வில், 7.5 சதவீத இடஒதுக்கீட்டை, 2020ல் அப்போதைய அ.தி.மு.க., அரசு அமல்படுத்தியது. இதனால், 2020-21ம் கல்வியாண்டில், 7.5 சதவீத ஒதுக்கீட்டில், 435 அரசு பள்ளி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் சேர்ந்தனர். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கூலி வேலை செய்யும் தொழிலாளிகளின் பிள்ளைகள், 100 நாள் வேலையை மட்டும் நம்பியுள்ள குடும்பத்தில் இருந்து டாக்டர்கள் உருவாகியுள்ளனர். இது, அவர்களின் குடும்ப வாழ்க்கை முறையை ஒட்டுமொத்தமாக மாற்றியுள்ளது.

சொந்த ஊர் சேலம், எடப்பாடி அருகில் உள்ள ஜலகண்டாபுரம். அப்பா முருகேஷ், நெசவு கூலி வேலை செய்கிறார். அம்மா இல்லத்தரசி. பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் பயின்றேன். அரசு சார்பில் வழங்கப்பட்ட பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்தேன். பயனுள்ளதாக இருந்தது. நீட் தேர்வில், முதல் முறையிலேயே தேர்ச்சி பெற்றேன். ஆன்லைனில் பயிற்சி பெற்றது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நீட் எழுதி தேர்ச்சியும் பெற்றிருந்தேன். முதலில், தனியார் கல்லுாரியில் இடம் கிடைத்தது; கட்டணம் செலுத்த முடியாது என்பதால், இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்தேன். பின், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவ இடம் கிடைத்தது. முழு கட்டணத்தையும் அரசு செலுத்துவதால், என்னால் மருத்துவம் பயில முடிகிறது.

எம்.சக்திவேல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு, தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவர்.

எனது சொந்த ஊர் புதுக்கோட்டை. தந்தை விவசாயி; தாய் இல்லத்தரசி. விவசாயம் செய்தாலும் பெரிதாக வருவாய் இல்லை. டாக்டராக வேண்டும் என்பது என் கனவு. சொற்ப வருவாயில் சாத்தியமா என்ற கேள்வி இருந்தது. நீட் தேர்வு எழுதியதால், 7.5 சதவீத இடஒதுக்கீட்டில், சாத்தியமாகியுள்ளது. முதல் முறையிலேயே தேறியதற்கு இது முக்கிய காரணம். எவ்வித பயிற்சியும் பெறவில்லை. என் குடும்பத்தில் முதல் டாக்டர் நான். இது, நீட் தேர்வால் சாத்தியமானது.

ஆர்.காயத்ரி, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவி.

விருதுநகர் மாவட்டம் ரெட்டியப்பட்டி கிராமம் சொந்த ஊர். அப்பா, அம்மா இருவரும், 100 நாள் வேலைக்கு சென்று வருவாய் ஈட்டுகின்றனர். கிராமப்புற மாணவர்களுக்கு நீட் தேர்வு மட்டுமின்றி, 7.5 சதவீத இடஒதுக்கீடு பெரும் உதவியாக உள்ளது. குறிப்பாக, வருவாய் குறைவாக உள்ள ஏழை கிராமப்புற மாணவர்கள் சாதிப்பதற்கு இது உதவுகிறது. அரசு தரும் பயிற்சி வகுப்பில் படித்தே தேர்ச்சி பெற்றேன். தனியார் பயிற்சி மையங்கள் போல பயிற்சிகளை எவ்வித தடங்கலும் இன்றி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், அனைத்து செலவுகளையும் அரசே வழங்குவது மிகச்சிறந்தது.கே.பிரவீன்குமார், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவர்.

நாமக்கல் பெரியமணலி எனது சொந்த ஊர். அப்பா இல்லை. அம்மா டெய்லரிங் செய்து வருகிறார். வருவாய் பெரிதாக இல்லை. சிறு வயது முதல் டாக்டராக வேண்டும் என்ற கனவு, நீட் தேர்வு மற்றும், 7.5 சதவீத இடஒதுக்கீடு சாத்தியமாக்கியது. இரண்டாவது முறை நீட் எழுதி, தேர்ச்சி பெற்றேன். அண்ணன் எம்.பி.பி.எஸ்., படிக்க முயற்சி செய்தார். அவருக்கு கிடைக்கவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து படித்தேன். எனக்கான அனைத்து செலவுகளும் அரசு தரப்பில் வழங்கப்படுகிறது. எனக்கு எவ்வித கஷ்டமும் தெரியவில்லை. நீட் தேர்வை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொண்டு, தேர்ச்சி பெற முடியாது என்பது தவறான கருத்து.

ஆர்.ரேணுகுமார், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவர்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரில் இருந்து இங்கு வந்து மருத்துவம் பயில்கிறேன். அப்பா கட்டட தொழிலாளி. அம்மா இல்லத்தரசி. எங்கள் வீட்டில் நானும், எனது சகோதரரும் எம்.பி.பி.எஸ்., படிக்கிறோம். இதற்கு முக்கிய காரணம் நீட் தேர்வு. அதனுடன், 7.5 சதவீத இடஒதுக்கீடும் சேர்ந்தால் அரசு பள்ளி மாணவர்களும் சாதிக்க முடிந்துள்ளது. அரசு சார்பில், வழங்கப்பட்ட பயிற்சியில் படித்தேன். முதல் முறையிலேயே நீட் தேர்வு எழுதி தேர்வாகி உள்ளேன். அனைத்து செலவுகளையும் அரசே ஏற்றுள்ளதால், ஒரே குடும்பத்தில், ஒரே நேரத்தில் இருவர் மருத்துவம் படிப்பது சாத்தியமாகியுள்ளது.

கே.நந்தகுமார், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவர்.

ஈரோடு சொந்த ஊர். கட்டுமான துறையில் தினக்கூலியாக அப்பா பணி செய்கிறார். அம்மா இல்லத்தரசி. பிளஸ் 2க்கு பின் ஓராண்டு எந்த உயர்கல்வியிலும் சேரவில்லை. அதன்பின், நீட் தேர்வு எழுதினேன். அதில், தேர்ச்சி பெற்று, 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். நீட் தேர்வும், 7.5 இடஒதுக்கீடும் இருந்ததால் டாக்டராக முடிந்தது. அனைத்து செலவையும் அரசே ஏற்பதால் ஏழை மாணவர்களுக்கும், மருத்துவப்படிப்பு சாத்தியமாகியுள்ளது.

க.சவுந்தர்யா, எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு தனியார் மருத்துவக் கல்லுாரி மாணவி.