ரூ.7 கோடி செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட்.. பணிகள் தீவிரம்! பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை

பொள்ளாச்சி, ஆக. 13- பொள்ளாச்சி நகராட்சியில், ஏழு கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே இரு பஸ் ஸ்டாண்ட்கள் உள்ளன. அதில், தெற்கு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் பஸ்களும், வடக்கு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர் உள்ளிட்ட புறநகர்களுக்கு இயக்கப்படும் பஸ்களும் வந்து செல்கின்றன. இந்நிலையில், புது பஸ் ஸ்டாண்ட் அமைக்க அரசு, ஏழு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கடந்த, 2022ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. பொள்ளாச்சி சி.டி.சி., மேட்டில், 3.25 ஏக்கர் நிலத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த, 2023ம் ஆண்டு மே மாதம் பணிகள் துவங்கப்பட்டன.

பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்த வசதிகள், கடைகள், இரண்டு தங்கும் விடுதிகள், பாதுகாப்பு அறை, பாலுாட்டும் அறை, போக்குவரத்து அலுவலகம், இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகிறது.

இப்பணிகளை நகராட்சி கமிஷனர் கணேசன் மற்றும் புதிதாக பொறுப்பேற்றுள்ள பொறியாளர்கள் குழு ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பஸ்கள் வெளியேறும் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகள், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பஸ்கள் இயக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து, ஒப்பந்ததாரர்களிடம், பஸ் ஸ்டாண்டில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து அறிவுரை வழங்கினார்.

நகராட்சி கமிஷனர் கூறுகையில், ”சி.டி.சி., மேட்டில், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணிகள், 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

கூடுதலாக, மூன்று கோடி ரூபாய் அரசிடம் நிதி கோரப்பட்டுள்ளது.கேரளா, வால்பாறை செல்லும் பஸ்களை தவிர மற்ற பஸ்கள் இந்த புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எம்.பி., மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தப்பட உள்ளது,” என்றார்.

நடவடிக்கை தேவை!

பழைய பஸ் ஸ்டாண்ட் கடைகள் பராமரிப்பின்றி சிதிலமடைந்துள்ளன. பழநி பஸ்கள் வெளியேறும் பகுதியும் சீரமைக்கப்படாமல் உள்ளது. பஸ் ஸ்டாண்ட் இடமாற்றம் செய்யப்பட உள்ளதால், பழைய பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, புதிய பஸ் ஸ்டாண்ட் பணிகளை விரைந்து முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அல்லது பழைய பஸ் ஸ்டாண்ட் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.