கோவை: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி, கோவை லீ மெரிடியன் ஓட்டலில் நேற்று நடந்தது.முன்னதாக, சென்னை துறைமுக ஆணைய தலைவர் சுனில் பாலிவால், துணைத்தலைவர் விஸ்வநாதன், காமராஜர் துறைமுக நிர்வாக இயக்குனர் இரென் சிந்தியா அளித்த பேட்டி:

சென்னையில் 3 துறைமுகங்கள் உள்ளன. சென்னை, காமராஜ், சிதம்பரனார் துறைமுகங்கள் அருகருகே அமைந்துள்ளன. இங்கிருந்து சீனா, ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது எளிதானது. கடந்த 12 ஆண்டுகளில் இதன் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
ரோடு, ரயில் வழிகள் வசதியாக அமைக்கப்பட்டுள்ளன. பார்க்கிங் வசதிகள், கையாளும் திறன்கள் உயர்த்தப்பட்டுள்ளன. புதிய வசதிகளால் ஏற்றுமதியை எளிதாக மேற்கொள்ள முடியும்.
பிற துறைமுகங்களை காட்டிலும், அதிக அளவாக சென்னை துறைமுகம் 6.7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. பல துார கிழக்கு நாடுகளிலிருந்து இந்த துறைமுகங்களுக்கு, இறக்குமதி அதிக அளவில் வருகிறது.
இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு பின், பல கன்டெய்னர்கள் பொருட்களின்றி காலியாக திரும்புகின்றன. இவற்றை பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு, இப்பகுதி ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கும்.
இதற்கான வசதியை கோவையில் ஏற்படுத்த, முயற்சி மேற்கொள்வோம். ரயில் விகாஸ் நிகாம் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்துவோம். நேரடியாக ரயில் வழியில் பொருட்களை அனுப்புவதால், போக்குவரத்து செலவை குறைக்க முடியும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, லீ மெரிடியன் ஓட்டலில் ஏற்றுமதியாளர் – இறக்குமதியாளர்கள் சந்திப்பு நடந்தது. இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் ராஜேஷ் லுந்த், சுங்கத்துறை கமிஷனர் விஜய் கிருஷ்ணன் வேலன், கோவை கலெக்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Leave a Reply