சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்த புது இயந்திரங்கள் கோவை வருகை

கோவை; 2026 சட்டசபை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்காக, பெங்களூருவில் உள்ள ‘பெல்’ நிறுவனத்தில் இருந்து, கோவை மாவட்டத்துக்கென, 600 கன்ட்ரோல் யூனிட்டுகள், 1,500 ‘விவி பேட்’ இயந்திரங்கள் புதிதாக தயாரிக்கப்பட்டு, தருவிக்கப்படுகின்றன.கோவை மாவட்டத்தில், 2026 சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேர்தல் பிரிவு ஈடுபட்டு வருகிறது. 1,200 வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுச்சாவடி வீதம், புதிதாக ஓட்டுச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

கல்லுாரி மாணவ, மாணவியரை வாக்காளர் பட்டியலில் இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, கல்லுாரிகளில் பிரத்யேகமாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

அடுத்த கட்டமாக, வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது. வீடு வீடாகச் சென்று, தற்போதுள்ள வாக்காளர்களை அடிப்படையாகக் கொண்டு, புதிய பட்டியல் தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.முந்தைய தேர்தல்களில் பயன்படுத்திய, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட்டுகள், ‘விவி பேட்’ இயந்திரங்கள் மற்றும் இதரப் பொருட்கள், தெற்கு தாலுகா அலுவலகத்தில் உள்ள இருப்பு மையத்தில், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணையம் அறிவிக்கும் நாள் வரை, அதிலுள்ள பதிவுகள் அழிக்கப்படாமல் பாதுகாப்பாக வைக்கப்படும். அதன்பின், ஆணையம் அறிவுறுத்தும் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நமது மாவட்டத்துக்கு வேறு மாநிலங்களில் இருந்து ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தருவிக்கப்படும்.

இச்சூழலில், கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் புதிதாக தயாரித்து வழங்க, பெங்களூருவில் உள்ள ‘பெல்’ நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்துக்கு மட்டும் முதல்கட்டமாக, 12 ஆயிரத்து, 150 கன்ட்ரோல் யூனிட்டுகள், 12 ஆயிரத்து, 660 விவி பேட் இயந்திரங்கள் தயாரித்து வழங்கப்பட உள்ளன.

அவற்றில், கோவை மாவட்டத்துக்கு மட்டும், 600 கன்ட்ரோல் யூனிட்டுகள், 1,500 விவி பேட் இயந்திரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவை விரைவில் பெங்களூருவில் இருந்து, கோவைக்கு பாதுகாப்பாக எடுத்து வரப்பட உள்ளன.