பொள்ளாச்சி; ‘இரவில் டாக்டர்கள், நர்சுகள் இல்லாததால் சிகிச்சை பெற திண்டாடுகிறோம். இதற்கு தீர்வு காண வேண்டும்,’ என பழங்குடியின மக்கள், சப்-கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தினர்.ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனக்கோட்டத்துக்கு உட்பட்ட உலாந்தி வனச்சரகத்தில் டாப்சிலிப், எருமைப்பாறை, கூமாபட்டி, கோழிகமுத்தி பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 1,000க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

பழங்குடியின மக்களின் மருத்துவ ஆதாரமாக, டாப்சிலிப் துணை சுகாதார நிலையம் உள்ளது. இங்கு, காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை மட்டுமே துணை சுகாதார நிலையம் செயல்படுகிறது. இரவு நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் பழங்குடியின மக்கள் திண்டாடுகின்றனர்.
இது குறித்து, பொள்ளாச்சி சப் – கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பழங்குடியின மக்கள் கூறியதாவது:
துணை சுகாதார நிலையத்தில் இரண்டு டாக்டர்கள், இரண்டு நர்சுகள் உள்ளனர். இவர்கள் பகல் நேரத்தில் சிகிச்சை அளிக்கின்றனர். இரவு நேரத்தில் டாக்டர், நர்சுகள் இல்லாததால் சிகிச்சை பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த, 12ம் தேதி கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சை அளிக்க வாடகைக்கு வாகனம் பிடித்து, வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இதேபோன்று, பாம்பு கடித்தவரை காப்பாற்றி ஊசி போட வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. வனவிலங்கு தாக்கியதால் காயம், அவசர சிகிச்சைக்கு என அனைத்துக்கும், வேட்டைக்காரன்புதுார், பொள்ளாச்சி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இரவு பணியில் டாக்டர், நர்சுகள் இல்லாததால், உடனடி முதலுதவி சிகிச்சை கூட கிடைக்காத நிலை உள்ளது. இரவு நேரத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால், சிகிச்சைக்காக அதிக துாரம் பயணிப்பதிலும் இடையூறு ஏற்படுகிறது.
மேலும், டாப்சிலிப்பில் ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. இங்கு இருந்த ஆம்புலன்ஸ், சமவெளி பகுதிக்கு சென்று விட்டது. ஆபத்து ஏற்பட்டால் சிகிச்சை அளிக்க, 3,000 ரூபாய் செலவு செய்து ஏதாவது வாடகை வாகனம் பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால், மனஉளைச்சல் ஏற்படுகிறது.
எனவே, இரவு நேரத்தில் டாக்டர்கள், நர்சுகள் பணியில் இருக்கவும், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தி தரவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
உயிர் காக்கும் சிகிச்சை தேவை!
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் பரமசிவம் கூறியதாவது: டாப்சிலிப் சுற்றுலா பயணியர் அதிகளவு வந்து செல்லக்கூடிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மேலும், பழங்குடியின மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். இங்குள்ள துணை சுகாதார நிலையம் வெறும் மாத்திரை, மருந்துகள் கொடுக்கும் இடமாக இல்லாமல், உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க கூடிய மையமாக இருக்க வேண்டும். துணை சுகாதார நிலையத்தை மேம்படுத்தி, தேவையான மருத்துவ சிகிச்சைக்கள் இங்கேயே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அரசு உரிய கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். இவ்வாறு, கூறினார்.
Leave a Reply