கோவை: பொதுமக்கள் தங்களது நிலங்களை பாகப்பிரிவினை செய்வது, மற்றொருவருக்கு விற்பனை செய்வது உள்பட பல்வேறு தேவைகளுக்காக நில அளவை செய்கிறார்கள். ஏனெனில் நில அளவை பத்திரத்தில் உள்ள அளவுடன் ஒத்து போனால் மட்டுமே எளிதாக பத்திரப்பதிவு செய்ய முடியும். இந்நிலையில் நில அளவை செய்ய விரும்பும் நில உரிமையாளர்கள் இனி இ-சேவை மையம் மூலம் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும், தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் செல்ல தேவையில்லை என்றும் கோவை கலெக்டர் பவன்குமார் தெரிவித்து உள்ளார்.
நில அளவை என்பது ரியல் எஸ்டேட் துறையில் மிக முக்கியமான ஒன்று.. ஒரு இடம் இல்லது வீட்டுமனை அல்லது தோட்டம் அல்லது அடுக்குமாடி அல்லது வீடு என எது வாங்குவதாக இருந்தாலும் நில அளவை சரியாக இருக்க வேண்டும். ஏற்னவே பத்திரப் பதிவில் குறிப்பிட்ட அளவை அப்படியே நம்பி பத்திரப்பதிவு செய்துவிடக்கூடாது. அரசின் பதிவில் உள்ள அளவை அதாவது ஸ்கெட்சில் உள்ள அளவு சரியாக இருக்கிறதா என்பதை அளந்து பார்க்க வேண்டும்.
அதன்படியே பத்திரப்பதிவு முன்பு செய்யப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். அத்துடன் பத்திரப்பதிவு செய்த அளவிற்கு பட்டா தந்துள்ளார்களா என்பதை நிலம் அல்லது வீடு வாங்குவோர் கவனமாக பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் நினைத்து பார்க்க முடியாத சிக்கல் வரும். இதை யாருக்காவது விற்க போனால், அப்போது தான் சிக்கல் வரும். என்ன மாதிரியான சிக்கல் வரும் என்றால், நில அளவை சர்வேயரால் பக்கத்து இடம் அதிகமாகவும், இந்த இடம் குறைவாகவும் தவறுதலாக மதிப்பிடப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே நில அளவின் படி பட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை அறிய நில அளவை செய்ய வேண்டியது அவசியம் ஆகும். பொதுமக்கள் தங்களது நிலங்களை பாகப்பிரிவினை செய்வது, மற்றொருவருக்கு விற்பனை செய்வதற்காக தற்போது நில அளவை செய்ய வேண்டும் என்றால் தங்களது சொத்துக்கள் உள்ள தாசில்தார் அலுவலகத்திற்கு நேரில் சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருக்கிறது. இந்த நிலையில் இனி பொதுமக்கள் நில அளவை செய்ய தாசில்தார் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. அதற்கு பதிலாக தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்தால் போதும் என்று கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறினார்.
இதுகுறித்து கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறுகையில், “நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பம் சமர்பித்து வந்தார்கள். இந்நிலையில் தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல், https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதியை முதல்வர் ஸ்டாலின் அவர்களால், கடந்த 20.11.2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நில அளவை செய்ய ‘எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும்’ நில அளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல், Citizen Portal மூலமாக இணையவழியிலேயே விண்ணப்பிக்க முடியும், தற்போது இச்சேவையினை தமிழ்நாடு முழுவதும் அனைத்து பொது சேவை மையங்கள் (இ-சேவை) மூலமாகவும் விண்ணப்பிக்கும் வகையில் இவ்வசதி விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே நில உரிமைதாரர்கள் தங்களது நிலங்களை அளவை செய்ய, பொது சேவை மையங்களை அணுகி, நில அளவைக்கான கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க முடியும். நில அளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும், நில அளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நில அளவர் கையொப்பமிட்ட ‘அறிக்கை / வரைபடம்’ நிலஅளவரால் பதிவேற்றம் செய்யப்பட்டு, மனுதாரர் https://eservices.tn.gov.in என்ற இணையவழிச் சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” இவ்வாறு கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் கூறினார்.
Leave a Reply