ஆசிரியர் பயிற்சி மையங்களில் சேர ஆளில்லை ; படித்தாலும் கிடைப்பதில்லை வேலை

கோவை; தமிழகத்தில் ஒரு காலத்தில் மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்கப்பட்ட தொடக்கக்கல்வி பட்டய படிப்பில், தற்போதுசேர்க்கை விகிதம் கடுமையாக சரிந்துள்ளது.தமிழகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ், 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், 8 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 6 ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் என, 26 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் செயல்படுகின்றன.

இவை தவிர, 12 அரசு உதவி பெறும், 25 சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன. அரசு நிறுவனங்களில் 1,740 இடங்கள்; அரசு உதவி பெறும் நிறுவனங்களில் 980 இடங்கள், தனியார் நிறுவனங்களில் 1,500 இடங்கள் உள்ளன.
இருப்பினும், பெரும்பாலான பயிற்சி நிறுவனங்களில் மிக சொற்ப அளவிலே மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.மேற்கு மண்டலத்தைபொறுத்தவரை, கோவை பயிற்சி நிறுவனத்தில் முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கை 17 பேர், இரண்டாம் ஆண்டில் 14 பேர் உள்ளனர்.கோத்தகிரி நிறுவனத்தில் முதலாம் ஆண்டில் மாணவர் சேர்க்கை இல்லை; இரண்டாம் ஆண்டில் 6 பேர் உள்ளனர். பெருந்துறையில் செயல்படும் பயிற்சி நிறுவனத்தில்நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இல்லை. இந்த நிலை மாநிலம் முழுவதும்உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகம் உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், ‘இரு ஆண்டுகளுக்கு முன் செயல்பட்ட பயிற்சி நிறுவனங்கள் 1:3 என்ற விகிதத்தில் குறைக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதிய, 1.5 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதாலும், தொடக்க கல்வி துறையில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் ஏற்படும் தாமதத்தாலும், ஆசிரியர் பட்டயப் பயிற்சி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் ஆசிரியர் பட்டயப்படிப்பு இல்லாமல் போய்விடும்’ என்றனர்.