இனி ஏழை மாணவர்களும் டாக்டர் ஆகலாம்! மாநகராட்சி பள்ளிகளில் நீட் பயிற்சி துவக்கம்

கோவை; கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான இலவச நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டன.கோவை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு, இலவச நீட் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில் (2024-2025) அக்டோபர் முதல் மே மாதம் வரை, இந்த பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

இதில், 43 மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். 8 பேர் தேர்ச்சி பெற்று, மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில், இந்த கல்வியாண்டு துவக்கத்திலேயே, பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும், 25 மாணவர்கள் மற்றும் 100 மாணவிகள் என மொத்தம், 125 மாணவர்களுக்கு, பயிற்சி வழங்கப்படவுள்ளது.

இதற்கான துவக்க நிகழ்ச்சி, நேற்று சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர், மாநகராட்சி ஆணையர், துணை மேயர் மற்றும் கோவை எம்.பி., உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற 8 பேர் இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 4 பேர் எம்.பி.பி.எஸ்., மற்ற 4 பேர் பி.டி.எஸ். படிப்புகளில் சேர வாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்த வெற்றி, மாநகராட்சியின் பயிற்சியால் சாத்தியமானது. இன்னும் கூடுதல் பேர் படிப்பில் சேர ஏதுவாக, இம்முறை பயிற்சி முன்னதாகவே தொடங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,” என்றார்.

இதே கருத்தை கோவை கலெக்டரும் வலியுறுத்தினார்.

தனியார் நிறுவனத்துடன் இணைந்து, நீட் பயிற்சி அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாரத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை, பயிற்சி நடைபெறும். பயிற்சி நாட்களில் மாணவர்களுக்கு இலவச சிற்றுண்டியும், மதிய உணவும் வழங்கப்படும்.

– தாம்ப்சன், முதன்மை கல்வி அலுவலர்

கோவை மாநகராட்சி