பொள்ளாச்சி ; பொள்ளாச்சி அருகே, மத்திய அரசின் நறுமண பொருட்கள் வாரியத்தின் வாயிலாக, மானியத்தில், ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை சேவை மையம் துவங்கப்பட்டுள்ளது. அதில், ஜாதிக்காய் சாகுபடியில் ஏற்படும் நோய் பாதிப்புகள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
பொள்ளாச்சி அருகே, ஆனைமலை, கோட்டூர் மற்றும் தமிழக எல்லையோர கிராமங்களில், தென்னையில் ஊடுபயிராக ஜாதிக்காய் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கேரள மாநிலத்தை விட, ஆனைமலை பகுதிகளில் விளைவிக்கப்படும் ஜாதிக்காய், ஜாதிபத்ரி உயர்தரமாக உள்ளதால், ஏற்றுமதியாளர்கள் போட்டி போட்டு நல்ல விலைக்கு வாங்கிச் செல்கின்றனர்.ஆண்டுதோறும், ஜூன் மாதம் முதல் நவ., மாதம் வரை ஜாதிக்காய் அறுவடை செய்து விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
கோட்டூரில், ‘பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனம்’ துவங்கப்பட்டு, விளைபொருள் தரம் பிரித்து, விலை நிர்ணயம் செய்து வெளி மாநிலங்களுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், மத்திய அரசின் நறுமண பொருட்கள் வாரியம் வாயிலாக, இரண்டு லட்சம் ரூபாய் மானியத்தில் கோட்டூரில், ‘கேர் அண்டு க்யூர்’ மையம் (ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை மையம்) துவங்கப்பட்டுள்ளது.இந்த மையத்தை, ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலைய தலைவர் சுதாலட்சுமி, வாரியத்தின் மண்டல அலுவலர் கனக திலிபன் துவக்கி வைத்து, விவசாயிகளுக்கு பயோ இடுபொருட்களை வழங்கினர்.
தொடர்ந்து, நறுமண பொருட்கள் வாரியத்தின் ஈரோடு மண்டல அலுவலகம் வாயிலாக, ஜாதிக்காய் தர மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.கோவை மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் சித்தார்த்தன், ஊடுபயிர் சாகுபடியின் அவசியத்தை விளக்கினார். ஆழியாறு தென்னை ஆராய்ச்சி நிலை இணை பேராசிரியர் (பூச்சியியல் துறை) அருள்பிரகாஷ், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் ஆகியோர் பேசினர்.
பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் ரஞ்சித் கூறியதாவது:
உலக சந்தையில், ஐ.பி.எம்., (இன்டக்கிரேட்டு பெஸ்ட் மேனேஜ்மென்ட்) தர நறுமண பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருவதாகவும், ஐ.பி.எம்., உத்திகளைப் பின்பற்றி நறுமண பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டால் மட்டுமே, ஏற்றுமதி சந்தையில் விரிவடைவது சாத்தியமாகும்.இதை அடிப்படையாக கொண்டு, பொள்ளாச்சி ஜாதிக்காய் உற்பத்தியாளர் நிறுவனத்தின் கோட்டூர் அலுவலக வளாகத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை சேவை மையம் (கேர் அண்டு க்யூர்) துவங்கப்பட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை சேவை மையம், நறுமண பொருட்கள் வாரியம் வாயிலாக, இரண்டு லட்சம் ரூபாய் உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது.ஜாதிக்காய் சாகுபடியுடன் தொடர்புடைய பல்வேறு நோய்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை எடுத்துக்காட்டும் எளிய சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் இந்த மையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.இந்த மையம் உறுப்பினர்களுக்கு, மானிய விலையில் டிரைக்கோடெர்மா போன்ற உயிரி உள்ளீடுகள் வழங்கப்பட்டது.ஜாதிக்காய் தோட்டங்களில் பூச்சிகளை திறம்பட நிர்வகிப்பது குறித்து விளக்கப்பட்டது.மேலும், விவசாயி ஒருவரால் தயாரிக்கப்பட்ட புதுமையான மற்றும் குறைந்த விலை ஜாதிக்காய் உரித்தல் இயந்திரம் மையத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.மையத்தில் ஆறு மாதத்துக்கு ஒரு முறை கூட்டம் நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Leave a Reply