கோவை: புற்றுநோய் ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டத்தின் கீழ், கோவையில் கடந்த, ஆக., 9ம் தேதி வரை, 3,10,525 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், 3 வகையான புற்றுநோய்களுக்கு ஒருங்கிணைந்த பரிசோதனை திட்டம், கோவை உட்பட 12 மாவட்டங்களில் கடந்த மே 9ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

கோவையில், மே 12ம் தேதி முதல் கிராமப்புற நல மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், கிராமப்புற மையங்களில், இதற்கான பரிசோதனை செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில், 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு, வாய் புற்றுநோய் பரிசோதனையும், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்படுகிறது.
கோவையில் கடந்த ஆக., 9ம் தேதி வரை, வாய் புற்றுநோய் பிரிவில் 1,83,798 பேருக்கும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் 53,000 பேருக்கும், மார்பக புற்றுநோய் 73,727 பேருக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் புதிதாக கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தேசிய சுகாதார திட்ட மாநில அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘மூன்று வகையான புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதில் வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் சற்று கூடுதலாக இருப்பதை காண்கிறோம். ஆரம்ப நிலையில் கண்டறிவதால், குணப்படுத்திவிட முடியும்’ என்றார்.
கோவை மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் சுமதியிடம் கேட்டபோது, ” தொடர்ந்து பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய், மார்பக புற்றுநோய் ஆரம்ப நிலையில் அறிந்துகொண்டால், 100 சதவீதம் குணப்படுத்திவிட முடியும். ஆரம்ப சுகாதார நிலையங்களில், பரிசோதனை மேற்கொள்பவர்கள் அங்கு கொடுக்கப்படும் சீட்டுகளை பத்திரமாக வைத்து, அறிவுறுத்தல் படி அடுத்த கட்ட பரிசோதனைகளை தவறாமல் மேற்கொள்ள வேண் டும்,” என்றார்.
பாதிப்பு ஏற்படுவது எதனால்?
l கோவையில் மேற்கொண்ட ஆய்வுகளின் படி, வாய் புற்றுநோய் ஆல்கஹால், புகைப்பழக்கம், ஹான்ஸ், கூல் லிப் போன்ற போதை பழக்கங்களால் அதிகளவில் ஏற்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அடிக்கடி வாயில் அல்சர் அதாவது புண் ஏற்படுபவர்கள் சற்று உஷாராக இருக்கவேண்டும். l மார்பக புற்றுநோய் உணவு முறை, அதிக கொழுப்பு உள்ள உணவுகள், தவறான டயட் முறை, வாழ்வியல் மாற்றங்களால் அதிகரித்துள்ளது. மேற்கத்திய உணவு பழக்கவழக்கங்கள் இதற்கு முக்கிய காரணம். l கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஹெச்.பி.வி., வைரஸ் தொற்று காரணமாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் உறவுகள், நீண்டகாலம் மாதவிடாய் சார்ந்த மாத்திரைகள் பயன்பாடு மற்றும் வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகிறது.
Leave a Reply