அவிநாசி சாலையில் மேம்பால பணி உச்சகட்டம்; இன்று முதல் போக்குவரத்து மாற்றம்

கோவை; அவிநாசி சாலை மேம்பாலம் பணிகள் காரணமாக, இன்று முதல் 13ம் தேதி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளளது.அவிநாசி சாலை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 12 கிமீ., துாரத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் கட்டப்படுகிறது. இதன் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்த நிலையில், ஹோப்ஸ் பகுதியில் உள்ள ரயில்வே மேம்பாலத்தின் மேல், ‘இரும்பு கர்டர்’ அமைக்கும் நடக்கவுள்ளது.

இதன் காரணமாக, இன்று முதல் 13ம் தேதி வரை இரவு 11:00 முதல் காலை 6:00 மணி வரை, ஹோப்ஸ் பகுதியின் இருபுறமும் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாநகரில் இருந்து வெளியில் செல்லும் கனரக வாகனங்கள், வெளியூர் பஸ்கள், லட்சுமி மில்ஸ் சந்திப்பில் இருந்து வலதுபுறம் திரும்பி ராமநாதபுரம், சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார் வழியாக எல் அண்ட் டி பைபாஸ் சாலை வழியாகவோ அல்லது காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி வழியாகவோ, அவிநாசி ரோடு செல்லலாம்.

மாநகருக்குள் வரும் வாகனங்கள், தொட்டிப்பாளையம் பிரிவில் இருந்து வலதுபுறம் திரும்பி தொட்டிபாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது சிட்ரா சந்திப்பில் இருந்து, ‘யூ டர்ன்’ செய்து காளப்பட்டி ரோடு, விளாங்குறிச்சி, சரவணம்பட்டி வழியாகவோ அல்லது நீலம்பூரில் இருந்து, எல் அண்ட் டி பைபாஸ் வழியாக ஒண்டிப்புதுார், சிங்காநல்லுார், ராமநாதபுரம் வழியாக செல்லலாம்.
இதேபோல், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாநகரில் இருந்து வெளியேறும் போது, பயனீயர் மில் சந்திப்பில் இருந்து, இடதுபுறம் திரும்பி ரொட்டிக்கடை மைதானம், காந்தி மாநகர், தண்ணீர் பந்தல், டைடல் பார்க் வழியாக அவிநாசி ரோட்டை அடையலாம்.

மாநகருக்குள் வரும் கார் மற்றும் பைக்குகள் சிட்ராவில் இருந்து டைடல் பார்க், தண்ணீர் பந்தல், காந்திமா நகர், ரொட்டிக்கடை மைதானம், பயனியர் மில்ஸ் வழியாக, அவிநாசி சாலையை அடையலாம்.

சிங்காநல்லுார் செல்லும் வாகனங்கள், எல் அண்ட் டி பைபாஸ் சாலையில் சிந்தாமணிபுதுார், ஒண்டிப்புதுார் வழியாக செல்லலாம். சிங்காநல்லுாரில் இருந்து ஹோப்ஸ் செல்லும் வாகனங்கள் பெர்க்ஸ் பள்ளி, ஜி.வி.ரெசிடென்சி, பன்மால் வழியாக, பயனீயர் மில்ஸ் அடைந்து காந்திமாநகர், தண்ணீர் பந்தல் வழியாக, அவிநாசி சாலையை அடையலாம்.

அல்லது ஒண்டிப்புதுார் எல் அண்ட் டி பைபாஸ் வழியாக நீலம்பூர் சென்று, அவிநாசி சாலையை அடையலாம்.

கோவை – அவிநாசி ரோடு கோல்டு வின்ஸ் பகுதியில், மேம்பால பணிகள் முடிவடைந்து ஏறுதளம் அமைக்கப்பட்டுள்ளது.