கோவை : கிறிஸ்தவர்களின் புனித வார துவக்கத்தை முன்னிட்டு, நேற்று தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு அனுசரிக்கப்பட்டது.
இயேசு கிறிஸ்து சிலுவையில் உயிர்த்தெழுந்தார். இதை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக 40 நாட்கள் நோன்பு இருந்து, இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை, ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகின்றனர்.
கிறிஸ்தவர்களின் தவக்காலம், மார்ச் 5ம் தேதி ‘சாம்பல் புதன்’ அன்று துவங்கி வரும், 20ம் தேதி ஈஸ்டர் வரை கடைபிடிக்கப்படுகிறது. தவக்காலத்தின் கடைசி வாரம், புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.முதல் நாள் குருத்தோலை ஞாயிறை தொடர்ந்து, பெரிய வியாழன், புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டு, வரும் ஞாயிறு ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.
முதல் நாளான நேற்று, மாநகரில் புனித மிக்கேல் அதிதுாதர் ஆலயம், புலியகுளம் புனித அந்தோணியார் தேவாலயம், காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைப்புதுார் குழந்தை இயேசு ஆலயம், போத்தனுார் புனிய சூசையப்பர் ஆலயம், கார்மெல் நகர் கார்மெல் அன்னை ஆலயம், கருமத்தம்பட்டி புனித ஜெபமாலை அன்னை பசிலிக்கா, சி.எஸ்.ஐ., கிறிஸ்து நாதர் ஆலயம், இம்மானுவேல், ஐ.பி.ஏ., சர்ச், ஹோலி டிரினிட்டி உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது.காலையில் கிறிஸ்தவர்கள், கைகளில் ஆசிர்வதிக்கப்பட்ட குருத்தோலைகளை ஏந்தி பக்தியுடன் கிறிஸ்தவர்களின் பாடல்களை பாடி, வீதிகளில் பவனி வந்தனர். தேவாலயங்களை அடைந்து சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.
Leave a Reply