பள்ளியில் பரிந்துரைத்தால் பெற்றோரே உஷார்; மருத்துவர்களை அணுகினால் தீர்வு நிச்சயம்

கோவை; ஆர்.பி.எஸ்.கே., திட்டத்தின் கீழ், பள்ளி, அங்கன்வாடிகளில் மருத்துவ நிலைகள் சார்ந்த பரிந்துரைகளை பெற்றோர் உடனுக்குடன் கவனித்து மருத்துவர்களை அணுகவேண்டும். அலட்சியம் கூடாது என அரசு மருத்துவமனை டி.இ. ஐ.சி., மைய குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.இத்திட்டத்தின் கீழ், 0 முதல் 18 வயதுள்ள குழந்தைகளின் குறைபாடுகளை பரிசோதனை முதல் அறுவைசிகிச்சை அனைத்தும் இலவசமாக அளிக்கப்படுகிறது. பரிசோதனைக்கும் அரசு வாகனத்தில் அழைத்துச்செல்லப்படுகின்றனர். 30 வகையான ஆரம்ப கட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அங்கன்வாடி, பள்ளிகளில் பரிசோதனை செய்யப்பட்டு குழந்தைகளிடம் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் உடனடியாக பெற்றோருக்கு தெரிவிக்கப்படுகிறது. இதில், பலர் அலட்சியம் காண்பிப்பதாக பள்ளி ஆசிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.பள்ளிகளில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டாலும், பரிசோதனை, சிகிச்சைக்கு செல்ல தாமதம் ஏற்படுத்துவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘ இத்திட்டத்தில் பாதவளைவு, இதய குறைபாடு, கண்,காது என அனைத்து பிரச்னைகளும் கண்டறியப்பட்டு கூறப்படுகிறது. ஆனால், பெற்றோர் சிலர் உடனடியாக மருத்துவர்களை பார்க்க செல்லாமல் காலம் தாழ்த்துகின்றனர். இதில், ஆசிரியர்களுக்கும், ஆர்.பி.எஸ்.கே திட்ட குழுவினருக்கும் கடும் சவால் உள்ளது, ‘ என்றார்.

இதுகுறித்து, அரசு மருத்துவமனை டி.இ.ஐ.சி., மைய குழந்தைகள் நல மருத்துவர் மோகன்ராஜிடம் கேட்டபோது, ” பாதவளைவு என்பது எளிதாக முழுமையாக பிறந்தவுடன் கவனித்தால் சரிசெய்துவிடலாம். ஆனால், பெற்றோர் தாமதமாக வருகின்றனர். பள்ளி, அங்கன்வாடிகளில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறிந்தால், உடனடியாக சிகிச்சைக்கு செல்லவேண்டும். அறுவைசிகிச்சை பரிந்துரைத்தால் பலர் அச்சப்பட்டு அதன்பின்னர் வருவதில்லை. சிறு வயதில் அறுவை சிகிச்சை செய்வதால், பாதிப்பை முழுமையாக குணப்படுத்தும் வாய்ப்பு அதிகம், சிகிச்சையும் எளிதாக இருக்கும்.

”ஐந்து வயதில் பேசிவிடுவான், எட்டு வயதில் நடந்துவிடுவான் என சிகிச்சைகளை தாமதிக்ககூடாது. ஆட்டிசம் போன்ற பிரச்னைகளை முன்கூட்டி அறிந்து சிகிச்சை அளித்தால் அக்குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த முடியும். பெற்றோர் இதில் கவனமாக இருக்கவேண்டும், ” என்றார்.