கோவை; மாநகரின் 3 இடங்களில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் துவங்க நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கோவையில் காந்திபுரம் போன்ற இடங்களில் வாகனங்களை நிறுத்த, இட வசதியின்றி வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். கிராஸ்கட் ரோட்டில் உள்ள வாகன நிறுத்தும் இடத்தில், 40 இரு சக்கர வாகனங்கள், 50 நான்கு சக்கர வாகனங்கள் மட்டுமே நிறுத்துவதற்கு வசதி உள்ளது.

தரைதள வாகன நிறுத்தும் இடத்தில், 95 இரு சக்கரம் மற்றும் 84 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏதுவாக, பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில், தியேட்டருக்கு எதிரே உள்ள பூங்கா இடத்தில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்பட உள்ளது.ராஜ வீதியில் ஏற்கனவே இயங்கி வரும் வாகன நிறுத்துமிடத்தில், 15 இரு சக்கரம் மற்றும், 40 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த வசதி உள்ளது.
தரைதள வாகன நிறுத்தும் இடத்தில், 50 இரு சக்கரம், 100 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது.
மூன்று இடங்களிலும் தலா ரூ.9.50 கோடி மதிப்பீட்டில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கப்படுகிறது.
நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், வாகன நிறுத்தம் அமைப்பதற்கு தேவையான வரைவு திட்ட அறிக்கை, தொழில்நுட்ப நிதி மற்றும் நிதி வல்லுனரை நியமித்து தயார் செய்யவும், திட்ட அறிக்கைக்கு நிர்வாக அனுமதி வேண்டியும், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Leave a Reply