கோவை : பகல் முழுவதும் பரபரப்பாக இருந்த கோவை அரசு மருத்துவமனை, நள்ளிரவில் அமைதியாக இருந்தது. சைரன் சத்தத்துடன் அவசர சிகிச்சை பிரிவு முன் வந்து நின்ற,108 ஆம்புலன்ஸ், மருத்துவமனையை பரபரப்பாக்கியது. விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்த ஒருவரை, ஸ்டெச்சரில் படுக்க வைத்து தீவிர சிகிச்சை பிரிவுக்குள் அழைத்துச் சென்றனர். ஆம்புலன்ஸ் நகர்ந்ததும் மீண்டும் மருத்துவமனை அமைதிக்குத் திரும்பியது.
நள்ளிரவு நேரத்தில் அரசு மருத்துவமனை எப்படி இருக்கிறது என்பதை பார்க்க, மருத்துவமனை வளாகத்துக்குள் ஒரு ரவுண்டு வந்தோம். போதிய மின் விளக்குகள் இல்லாததால், வளாகத்தில் பெரும்பாலான இடங்கள் இருளில் மூழ்கி இருந்தன. நடைபாதையில் இருந்த குழிகளில் கழிவுநீர் தேங்கி இருந்தன. நோயாளிகள் நடந்துசெல்லும் வழியில், சாக்கடை கால்வாய் கட்ட தோண்டப்பட்ட குழி, தடுப்புகள் எதுவும் வைக்கப்படாமல் ஆபத்தான நிலையில் இருந்தது. வயதான நோயாளிகள் சிலர், தட்டுத்தடுமாறியபடி, அவ்வழியில் கடந்து சென்றனர்.
தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தன. கோரப்பற்களை காட்டி, வெறியோடு குரைக்கத் துவங்கியதால், அதற்குமேல் கடந்துசெல்ல தைரியமின்றி, வழியை மாற்றி ஒருங்கிணைந்த அவசர கால தாய்-சேய் தீவிர சிகிச்சை பகுதிக்குச் சென்றோம்.
திறந்தவெளியில் உறக்கம்
அக்கட்டடத்தின் முன் பகுதியில் உள்ள காலியிடத்தில், ஆண்கள், பெண்கள் என, 50க்கும் மேற்பட்டோர் தரையில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர். கொசுக்கடியில் துாங்க முடியாமல், எழுந்து உட்கார்ந்து இருந்தவரிடம் பேசினோம்.
‘இவுங்க எல்லாம் பேஷண்ட பார்க்க வெளியூர்ல இருந்து வந்தவங்க. கொஞ்சப் பேர் பேஷண்டுக்கு அட்டென்டராக வந்தவங்க. தங்க வேற இடம் இல்ல; அதனால, இங்க படுத்து இருக்காங்க’ என்றார்.
நீங்க எந்த ஊரு…?’
‘எனக்கு புளியம்பட்டி. என் சம்சாரத்தை இங்க பிரசவத்துக்காக ‘அட்மிட்’ பண்ணி இருக்கேன். ரெண்டு நாளைக்கு முன்னாடி பெண் குழந்தை பிறந்துச்சு. அவுங்க ஹார்ட் பேஷண்டு. அதனால, 10 நாளுக்கு முன்னாடி ‘அட்மிட்’ பண்ணிட்டேன். நான், பத்து நாளா இங்க படுத்திருக்கேன். மழை வந்தா படுக்க முடியாது; ஷெட் போட்டுக் கொடுத்தா நல்லா இருக்கும்’ என்றார்.
இரவு பணியில் இருந்த பெண் ஊழியர்களிடம் கேட்டபோது, ‘நாங்கள் என்ன சார் செய்ய முடியும். ஒரு பேஷன்ட்டை பார்க்க ஐந்து பேருக்கு மேல வர்றாங்க. பேஷண்ட் கூட ஒருவர் தான் இருக்க முடியும். ஜென்ஸ் அனுமதி இல்லை.
இங்க தங்கக் கூடாதுன்னு சொன்னாலும் கேட்கறதில்ல. பாவம் வெளியூர்க்காரங்க. படுத்துட்டு போகட்டுமுன்னு ஒன்னும் சொல்லறதில்ல’ என்றார்.
ஷெட் அவசியம்
அரசு மருத்துவமனையில் உள்ள ஒருங்கிணைந்த அவசர கால தாய்-சேய் தீவிர சிகிச்சை பிரிவில், தினமும், 20 பிரசவங்களுக்கு மேல் நடக்கின்றன. அதிநவீன சிகிச்சை வசதிகள் இருப்பதால், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கோபி, சத்தியமங்கலம், புளியம்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்தும் பிரசவத்துக்காக இங்கு வருகின்றனர்.
பிரசவத்தில் சிக்கல் உள்ள பெண்களை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பரிந்துரைத்து, இங்கு அனுப்பி வைக்கின்றனர். வெளியூரில் இருந்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்களை பார்க்க பார்வையாளர்களும் அதிகம் வருகின்றனர். அதனால், காலியாக உள்ள இடத்தில் ஷெட் அமைத்துக் கொடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையை பொறுத்தவரை புதிய கட்டடம் உள்ள பகுதிகள் மட்டுமே சுகாதாரமாக உள்ளன. பழைய கட்டடம் உள்ள பகுதிகளில் நடைபாதைகள் குண்டும், குழியுமாக, சுகாதாரமில்லாமல் துர்நாற்றம் வீசும் நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கினால் வெளியேற்ற வடிகால் இல்லை. இதனால், நோயாளிகள் நடக்க முடியாத நிலை உள்ளது. போதிய அளவு கழிப்பறை வசதி இல்லை. அரசு மருத்துவமனை நிர்வாகம் நினைத்தால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, அரசு மருத்துவமனையை சிறப்பாக நிர்வகிக்க முடியும்.
Leave a Reply