கனிமவள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு: கோவை புதிய கலெக்டர் உத்தரவாதம்

கோவை : ”கனிம வள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்,” என கோவை கலெக்டர் பவன்குமார் கூறினார். கோவை மாவட்டத்தின், 184வது கலெக்டராக பவன்குமார் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் முந்தைய கலெக்டர் கிராந்திகுமார் பொறுப்புகளை ஒப்படைத்தார்.

Latest Tamil News

புதிய கலெக்டராக பொறுப்பேற்ற பின் பவன்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசின் அனைத்து சிறப்பு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளில் அரசின் பிறதுறை அதிகாரிகளோடு இணைந்து செயலாற்றுவோம். அரசின் அனைத்து திட்டங்களும் தொய்வின்றி இடைவிடாமல் நிறைவேற்றப்படும். மக்களின் கோரிக்கைகளின் மீது தனி கவனம் செலுத்தப்படும். கோவை புறநகர் பகுதிகளில் கனிமவளங்கள் கொள்ளை போவது தடுக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளோடு விவாதித்து என்னென்ன நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமோ அதை மேற்கொள்வேன். கனிம வள பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றார்.அதே போல் போதைப்பொருள் தடுப்புப்பணிகளை தீவிரப்படுத்த போலீசாருக்கு அறிவுறுத்தப்படும்.இவ்வாறு கலெக்டர் பவன்குமார் கூறினார்.புதியதாக பொறுப்பேற்ற கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.