‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகைக்கு குவிந்த மனு

கோவை; வடவள்ளியில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமில் மகளிர் உரிமை தொகை கோரி ஏராளமானோர் மனுக்கள் அளித்தனர்.தமிழக முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை நேற்று துவக்கிவைத்தார். அரசுத் துறை சேவைகள், திட்டங்களை மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கிடும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உட்பட, 13 துறைகளின் சார்பில், 43 சேவைகள் வழங்கப்படுகின்றன. முதல்வர் இத்திட்டத்தை துவக்கி வைத்ததை அடுத்து, கோவை மாநகராட்சி, 36வது வார்டு, வடவள்ளியில் உள்ள காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில், மாவட்ட கலெக்டர் முகாமை துவக்கிவைத்தார்.முகாம் துவங்கியவுடன், மூன்று நபர்களுக்கு பிறப்பு சான்றிதழ், 9 துாய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை, ஒருவருக்கு ‘தாட்கோ’ வாயிலாக மானியத்துடன்கூடிய வாகன கடனுதவி, ஒருவருக்கு சொத்து வரி பெயர் மாற்ற ஆணையும் வழங்கப்பட்டது.

நேற்று காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்த முகாமில், 600க்கும் மேற்பட்டோர் பல்வேறு சேவைகளுக்கான மனு அளித்தனர். இதில், மகளிர் உரிமைத்தொகை கோரி பெரும்பாலான மனுக்கள் அளிக்க வரிசையில் காத்திருந்தனர்.

முகாமின் ஒரு பகுதியாக, சிறப்பு மருத்துவ முகாம் இடம்பெற்றது. துவக்க விழாவில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், கோவை எம்.பி., ராஜ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

இன்றும், நாளையும்!


இன்று வடக்கு மண்டலம், 15வது வார்டு எஸ்.எம்.ஆர்., திருமண மண்டபம், நாளை மத்திய மண்டலம், 31வது வார்டு சங்கனுார் பிரதான சாலை, ஆர்.கே., திருமண மண்டபம், தெற்கு மண்டலம், 76, 79வது வார்டு அர்ஜூன் மஹாலிலும் முகாம் நடக்கிறது.