கோவை; இ- பட்டாக்களுடன், ஆதார் எண்ணையும், போட்டோவையும் இணைத்து, ஆன்லைனில் வழங்கும் நடைமுறை, விரைவில் அமலுக்கு வருகிறது. இதன் வாயிலாக, மோசடிகளுக்கும், ஆள்மாறாட்டத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்கின்றனர் வருவாய்த்துறை அதிகாரிகள்.பட்டா என்பது, ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு உள்ளது என்பதைக் காட்டும் ஆவணம். ‘இ–பட்டா’ என்பது மின்னணு முறையில் வழங்கப்படும் பட்டா.

அதிகாரப்பூர்வ இணையதளமான, eservices.tn.gov.in வாயிலாக, பட்டா பெற விண்ணப்பிக்கலாம். நிலம் அமைந்துள்ள மாவட்டம், வட்டம், கிராமம் போன்ற விவரங்களை குறிப்பிட்டால், இ- பட்டாவை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
நில உரிமையாளர் மாறும் போது பட்டாவையும் மாற்றிக்கொள்ளலாம். இதற்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க, tamilnilam.tn.gov.in என்ற இணையதளத்தைப் பயன்படுத்தலாம். இதற்கு வருவாய்த்துறை அதிகாரிகள், ரேஷன்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்ட விபரங்களை கேட்டு பெறுவர்.
இந்நிலையில், இ- பட்டாவில் புகைப்படம் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.
பேரூர் தாசில்தார் ரமேஷ்குமார் கூறியதாவது:
பட்டா வழங்குவதற்கு முன்பு அதாவது 2021 லிருந்து, தற்போது வரை உள்ள எச்.எஸ்.டி.,பட்டா, இ-பட்டா, அரசாணை 97ன் படியான நத்தம் பட்டா, இவை மூன்றும் கூகுள் ஷீட்டில் தான் தயார் செய்யப்படுகிறது. அப்போது பட்டாதாரரின் ஆதார் எண், மொபைல் எண், போட்டோ ஆகியவை சரிபார்த்து பதிவு செய்யப்படுகிறது. பட்டா பெறுபவரிடமிருந்து ஆதார் கார்டு, ரேஷன்கார்டு, மின்இணைப்பு எண் பெற்று பிரத்யேக மாஸ்டர் ஷீட்டில் பதிவு செய்து வருவாய்த்துறை சர்வரில், ‘அப்லோடு’ செய்து விடுகிறோம். அவை தான் இ- பட்டாவாக மறுவடிவம் பெறுகிறது. அதில் போட்டோ மற்றும் ஆதார் எண் இடம் பெறுவதில்லை. அவற்றை இடம் பெறச் செய்வதற்கான முயற்சிகளை, தற்போது வருவாய்த்துறை மேற்கொண்டு வருகிறது. இதன் வாயிலாக ஆள்மாறாட்டங்களையும், மோசடிகளையும் தடுக்கலாம்,” என்றார்.
Leave a Reply