சோமனூர்: கூலி உயர்வு ஒப்பந்தத்தை சட்ட பாதுகாப்புடன் நடைமுறைப்படுத்த வேண்டும், என, கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் சுமார் ஐந்து லட்சம் சாதா விசைத்தறிகளும், கோவை, திருப்பூர் மாவட்டத்தில், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரமாக, சுமார், இரண்டு லட்சம் சாதா விசைத்தறிகளும் இயக்கப்படுகின்றன.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள, 90 சதவீத விசைத்தறிகள் கூலியின் அடிப்படையில் இயக்கப்படுகின்றன. ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து பாவு நூல் பெற்று, கிரே காடா துணிகள் உற்பத்தி செய்யப்படுகிறது. மூன்று ஆண்டுகள் விலைவாசி உயர்வு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு, மின் கட்டண உயர்வுக்கு ஏற்ப, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, ஜவுளி உற்பத்தியாளர்களுடன் கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வருவது வழக்கம். கடந்த, 11 ஆண்டுகளாக நெசவு கூலி உயர்வை, ஜவுளி உற்பத்தியாளர்கள் முறையாக அமல்படுத்தாமல், குறைத்து வழங்கி வருவதால், சாதா விசைத்தறியாளர்கள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு ஜவுளி உற்பத்தியாளர்கள் ஒப்பந்த கூலியை குறைத்து வழங்கும் போது, சாதா விசைத்தறியாளர்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை குறைத்து வழங்க முடியாத நிலையால்,முழு சுமையும் விசைத்தறி உரிமையாளர்கள் ஏற்க வேண்டி உள்ளது. கூலியை குறைப்பதால், விசைத்தறி சார்பு தொழிலும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். அரை நூற்றாண்டுகளாக, உரிமையாளர்களின் வாழ்வாதாரமாக இருந்த சாதா விசைத்தறிகள், பழைய இரும்புக்காக உடைக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.பலரும் தொழிலை விட்டு செல்வதால், விசைத்தறி தொழில் சிறிது, சிறிதாக நசிந்து வருவதை கண் கூடாக பார்க்க முடிகிறது.
கூலி உயர்வுக்கு சட்ட பாதுகாப்பு சாதா விசைத்தறி உரிமையாளர்களின் அடிப்படையாக இருப்பது கூலி தான். அது குறைக்கப்பட்டால், தொழில் நடத்த முடியாத நிலை ஏற்படும் என்பது உண்மை. இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த 2014 முதல் கூலி உயர்வு கிடைக்காமல் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறோம். போராட்டங்களை நடத்துவதே வாழ்க்கையின் அங்கமாக மாறிவிட்டது.
கடந்த, ஏப்., மாதம் ஏற்படுத்தி தரப்பட்ட கூலி ஒப்பந்தத்தை அமல்படுத்திட ஜவுளி உற்பத்தியாளர்கள் மறுத்து வரும் நிலையே நீடிக்கிறது. கடைசியாக நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் கூட, சட்ட பாதுகாப்புடன் கூலி உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வேண்டும், என, வலியுறுத்தி இருந்தோம். அதிகாரிகளும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும், என, உறுதி அளித்திருந்தனர். ஆனால், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லை. கூலி உயர்வை சட்ட பாதுகாப்புடன் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க ஆளும் கட்சி தலைவர்களிடமும், இப்பிரச்னைக்கு அரசுக்கு அழுத்தம் கொடுக்க, எதிர்கட்சி தலைவர்களிடமும் வலியுறுத்தி உள்ளோம். கோரிக்கையை நிறைவேற்றா விட்டால் மீண்டும் போராட்ட களத்தில் இறங்குவோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.







Leave a Reply