தனியார் பஸ்கள் ‘அட்ராசிட்டி’; விபத்து அபாயம் அதிகரிப்பு

கிணத்துக்கடவு; பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்களில், அதிகளவு பயணியர் ஏற்றிச் செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.பொள்ளாச்சி – கோவை வழித்தடத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் தினமும் மொத்தம், 580 ‘டிரிப்’கள் இயங்கப்படுகின்றன. இதில், பல தனியார் பஸ்களில், அளவுக்கு அதிகமாக பயணியரை ஏற்றி செல்வதால், விபத்து ஏற்படுகிறது.

இத்துடன், அதிக சப்தமாக பாடல் ஒலிக்க செய்வதால், பஸ் அதிவேகத்துடன் இயக்குவதால் பயணிக்கும் பயணியருக்கு தெரிவதில்லை. இதனால், மற்ற வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ் பயணிப்பதில் கூட சிக்கல் ஏற்படுகிறது.மேலும், பயணியர் இறங்கும் ஸ்டாப் வந்தாலும், வேகமாக இறங்குமாறு கண்டக்டர் கட்டாயப்படுத்துகிறார். கூட்ட நெரிசலில் இருந்து வெளியே வந்து இறங்குவதற்குள் பஸ்சை நகர்த்துவதால், தனியார் பஸ் ஊழியர்களுக்கும், பயணியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

தனியார் பஸ்சில் கால் வைக்க கூட இடமில்லாத அளவுக்கு, பயணியரை அதிகமாக ஏற்றுவதுடன், பெண்களை முன்பக்க படிக்கட்டில் தொங்கும் படி நிற்க வைத்து செல்கின்றனர்.

இதனால் வேகத்தடை உள்ளிட்ட பகுதிகளில் படியில் பயணம் மேற்கொள்பவர்கள் கீழே விழுந்து, விபத்துக்குள்ளாக அதிக வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்க, அரசு பஸ்சில் உள்ள ஹைட்ராலிக் கதவுகள் போல், தனியார் பஸ்களிலும் பொருத்த வேண்டும். இந்த அத்துமீறல்களை, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்காணித்து, தனியார் பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.