ரயில்வே மேம்பாலப் பணி விறுவிறு: 19 ஆண்டுகளுக்கு பின் விமோசனம்

கோவை: கோவை – அவிநாசி ரோடு மற்றும் சிங்காநல்லுார் பகுதியில் இருந்து வருவோர், விளாங்குறிச்சி ரோட்டுக்குச் செல்ல, தண்ணீர் பந்தல் ரோடு பிரதானமானது. ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுவதால், தண்ணீர் பந்தல் ரோடு – அவிநாசி ரோடு வழித்தடத்தை இணைக்கும் வகையில் 549.140 மீட்டர் நீளத்துக்கு மேம்பாலம் கட்ட, 2006ல் தமிழக அரசு உத்தரவிட்டது.சர்வீஸ் ரோடு அமைக்க நிலம் கையகப்படுத்துவதற்கு ஆட்சேபம் தெரிவித்து சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததால், மேம்பாலப்பணி முடங்கியது. தண்டவாளம் அமைந்துள்ள ரயில்வே பகுதியில் மட்டும் முடிந்துள்ளது.

தற்போது சர்வீஸ் ரோடு தவிர்த்து மீதமுள்ள இடத்தில் மேம்பால வேலையை செய்ய நெடுஞ்சாலைத்துறை உயரதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால், பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது. 19 ஆண்டு களாகி விட்டதால், திருத்திய மதிப்பீடு தயாரித்து மேம்பாலப் பணி மற்றும் அணுகுசாலை அமைக்க 15.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தண்ணீர் பந்தல் ரோட்டில் துாண்கள் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அவிநாசி ரோடு வழித்தடத்தில் துாண்கள் அமைக்கும் பணி அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. 18 மாதங்கள் அவகாசம் வழங்கியிருப்பதால், 2026 டிச.க்குள் முடிக்க ஒப்பந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாநில நெடுஞ்சாலைத்துறை கிராம சாலைகள் பிரிவினர் கூறுகையில், ‘துாண்கள் அமையும் இடத்தில் இரண்டு குடிநீர் குழாய்கள் செல்கின்றன. அவற்றை வேறிடத்துக்கு மாற்றுவதற்கு, குடிநீர் வடிகால் வாரியத்துக்கும், மாநகராட்சிக்கும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அப்பணியும் விரைவில் துவங்க இருக்கிறது. சர்வீஸ் ரோடு போடுவதற்கு, 2-2.5 மீட்டர் அகலத்துக்கு, 35 பேரின் நிலம் கையகப்படுத்த வேண்டும். சில நில உரிமையாளர்கள் மேல்முறையீடு செய்த வழக்கு நிலுவையில் இருப்பதால், கடைசி கட்டமாக சர்வீஸ் ரோடு போட முடிவு செய்யப்பட்டிருக்கிறது’ என்றனர்.

மேம்பாலம் டேட்டா

மேம்பாலத்தின் அகலம் 8.50 மீட்டர், ஓடுதளத்தின் அகலம் 7.50 மீட்டர். அவிநாசி ரோடு வழித்தடத்தில் 9 கண்கள், 134 மீட்டர் தடுப்புச்சுவர், 137.52 மீட்டர் நீளத்துக்கு அணுகுசாலை, 433.053 மீட்டர் நீளத்துக்கு வடிகால் கட்டப்படும். தண்ணீர் பந்தல் ரோட்டில் 8 கண்கள், 64.90 மீட்டர் தடுப்புச்சுவர், 68.42 மீட்டர் நீளத்துக்கு அணுகுசாலை, 265.830 மீட்டர் நீளத்துக்கு வடிகால் கட்டப்படும்.