கோவை: கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டில் கலெக்டர் அலுவலகம், அதனருகே போலீஸ் கமிஷனர், தெற்கு கோட்டாட்சியர், எஸ்.பி., பத்திரப்பதிவு துறை, தீயணைப்பு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதே ரோட்டில் ரயில்வே ஸ்டேஷன் உள்ளது.ரோட்டின் இருபுறமும் வணிக நிறுவனங்கள், ஹோட்டல்கள் செயல்படுகின்றன. எந்நேரமும் வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும். ரோட்டின் இருபுறமும் மாநகராட்சியால் மழை நீர் வடிகால் கட்டப்பட்டு இருக்கிறது.
நேற்றைய தினம் மாலை 4 மணி அளவில் அரை மணி நேரம் கன மழை பெய்தது. மழை நீர் வடிகாலில் செல்ல வழியின்றி, ரோட்டில் தேங்கியது. லங்கா கார்னர் அருகே ரயில்வே ஸ்டேஷன் முன் கழிவு நீரோடு மழை நீரும் கலந்து தேங்கியதால், வாகன போக்குவரத்து பாதித்தது. ரயில்வே ஸ்டேஷனுக்குச் செல்ல முடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர். ரயிலில் வந்திறங்கிய பயணிகள் லக்கேஜ்களுடன் கழிவு நீரில் இறங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.துாய்மை பணியாளர்கள் விரைந்து வந்து, அடைப்புகளை நீக்கி, தண்ணீர் வழிந்தோட நடவடிக்கை எடுத்தனர்.
இதேபோல், அவிநாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் மற்றும் உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து வழிந்தோடி வந்த மழை நீர் வடிகாலில் செல்லாமல் செஞ்சிலுவை சங்கம் ரவுண்டானா பகுதியில் ரோட்டில் சென்று போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே தேங்கி, வடிகாலில் வடிந்தது.அவிநாசி ரோடு பழைய மேம்பாலம் சுரங்கப்பாதைக்கு மழை நீர் செல்வதை தடுக்க, மாநகராட்சி சார்பில், உப்பிலிபாளையம் சந்திப்பில் சில மாதங்களுக்கு முன், ரோட்டுக்கு கீழ் கான்கிரீட் பாக்ஸ் பதிக்கப்பட்டது.
மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் சர்ச் பகுதியில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை புதிதாக வடிகால் கட்ட வேண்டும். இன்னும் கட்டாததால், நேற்று பெய்த மழைக்கு ரோட்டில் தண்ணீர் வழிந்தோடியது.மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘உப்பிலிபாளையம் சந்திப்பில் இருந்து டிஸ்போசபிள் பாயின்ட் வரை மழை நீர் வடிகால் கட்டுவதற்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. மேம்பாலம் தற்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அடுத்த கட்டமாக மழை நீர் வடிகால் அப்பகுதியில் கட்டப்படும்’ என்றனர்.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ”ஸ்டேட் பாங்க் ரோட்டில் வடிகால் சிறிய அளவில் இருக்கிறது.”அதிகமான தண்ணீர் வருவதால் வடிந்து செல்ல முடிவதில்லை. 15 முதல், 30 நிமிடத்துக்குள் வழிந்தோடி விடும். மாற்று ஏற்பாடு செய்வது தொடர்பாக ஆய்வு செய்யப்படும்,” என்றார்.
Leave a Reply