பாதாள சாக்கடை குழியில் அடைப்பு ஏற்பட… மழை நீர் காரணமாம்! அதிகாரிகள் கருத்தால் கவுன்சிலர்கள் அதிருப்தி

பொள்ளாச்சி: பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளில், மழைநீரும் அதிகளவு கலக்கின்றன. இதனால், குழிகளில் அடைப்பு ஏற்பட்டு, நீர் வெளியேற காரணமாக உள்ளது, என, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அளித்த பதிலால், நகராட்சி கவுன்சிலர்கள் அதிருப்தி அடைந்தனர்.பொள்ளாச்சியில் பாதாள சாக்கடை திட்டத்தில் உள்ளபிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஆலோசனை கூட்டம், நகராட்சி அலுவலகத்தில் நடந்தது. நகராட்சி தலைவர் சியாமளா தலைமை வகித்தார். துணை தலைவர் கவுதமன் முன்னிலை வகித்தார்.

நகராட்சி கமிஷனர் கணேசன் பேசுகையில், ”பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகள், கழிவுநீர் உந்து நிலையம், நீரேற்று நிலையத்தை முறையாக பராமரித்து, கழிவை முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.நகராட்சி, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அடங்கிய குழு அமைத்து, பிரச்னைகளுக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் முருகேசன் பேசியதாவது:

பாதாள சாக்கடை திட்டத்தில், 11.25 மில்லியன் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்ய வேண்டும். தற்போது, 3 மில்லியன் லிட்டர் கழிவுநீர் தான் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. 20 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். தற்போது, 6,628 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதை நிறைவு செய்ய வேண்டும்.

பல இடங்களில், குழிகளில் துணிகள், கழிவுகள் கலப்பதால் அடைப்பு ஏற்படுகிறது. அதையும் தாண்டி, ஆள் இறங்கும் குழிகளில் மழைநீர் அதிகளவு கலக்கின்றன. 15 லட்சம் லிட்டர் மழைநீர் குழிகளில் கலப்பதால் தான், குழிகளில் அடைப்பு ஏற்பட்டு நீர் பொங்கி வெளியேறுகிறது.

மழைநீர் கலப்பதை தடுக்க குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் பிரச்னையினாலும் கழிவுநீர் நீரேற்றம் செய்வதில் இடையூறு ஏற்படுகிறது.
மேலும், நகராட்சி பராமரிப்புக்கு, 10.54 கோடி ரூபாய் வழங்க வேண்டும். இந்த நிதியை கொடுத்தால் ஒப்பந்ததாரர் வேகமாக பணிகளை மேற்கொள்ள முடியும். 120 இடங்களில், ரோட்டின் உயரத்தோடு ஒப்பிடும் போது, ஆள் இறங்கும் குழிகள் பள்ளமாக உள்ளன. இவற்றை சரி செய்ய வேண்டும்.

இவ்வாறு, பேசினார்.

நகராட்சி பொறியாளர் சண்முகவடிவு பேசுகையில், ”மழை காலம் மட்டும் இல்லாமல் தொடர்ந்து பாதாள சாக்கடை திட்ட ஆள் இறங்கும் குழிகளை பராமரிக்க வேண்டும். புகார்கள் வந்தால் அவற்றை பதிவு செய்ய வேண்டும். நீரேற்று நிலையங்கள், உந்து நிலையங்களிலும் ஆட்கள் உள்ளனரா; ஜெனரேட்டர் வசதி உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்,” என்றார்.

கவுன்சிலர்கள் பேசியதாவது: ஆள் இறங்கும் குழிகள் முறையாக துார்வாரப்படுவதில்லை. அவற்றை பராமரிக்காததால் தான் கழிவு தேங்கி மழை காலங்களில், மழைநீருடன் கழிவுநீரும் கலந்து ரோட்டில் வெள்ளமாக ஓடுகிறது. ஆங்காங்கே குழிகள் சேதமடைந்து பராமரிப்பின்றி உள்ளது.

குழிகளின் மூடிகள் தரமின்றி உள்ளன. ஆங்காங்கே அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவது தொடர்கிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், சென்சார் கருவி வாயிலாக உந்து மற்றும் நீரேற்று நிலையங்கள் செயல்படுவதாக கூறுகின்றனர்.

அவை, முறையாக இயங்கினால் ஏன் தண்ணீர் தேங்குகிறது. மழைநீர் செல்வதால் தான் பிரச்னை என்ற காரணமாக ஏற்க முடியாது. அதிகாரிகள் முறையாக களமிறங்கி ஆய்வு செய்ய வேண்டும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிகாரிகள், பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.

அதிகாரிகள் களமிறங்கணும்!

நகராட்சி துணை தலைவர் பேசுகையில், ”கழிவுநீர் பிரச்னைகளை பார்வையிட, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் களத்துக்கு வர வேண்டும். மழை பெய்தால் ஜீப்பில் வந்து ஆய்வு செய்யலாம். மழை பெய்யாத காலத்தில், உண்மை நிலவரத்தை அறிய களத்துக்கு வாங்க. பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுங்க. மக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். மழுப்பலாக பதிலளிப்பதை தவிர்க்க வேண்டும்,” என்றார்.இதையடுத்து, கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம், சுரங்கபாதையில் முறையாக கழிவு அகற்றப்படுகிறதா என, நகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க முடியாமல், ரயில்வே அதிகாரிகள் திணறினர்.