வயதான காலத்தில் பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். மழைக்காலங்களில் எளிதாக தொற்று பாதிப்பு அதிகரிக்கும் என்பதால், முதியோர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.இதுகுறித்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் சுமதி கூறியதாவது:

n மழைக்காலங்களில் அதிக ஈரப்பதம், தொற்று பாதிப்புகளுக்கு வழிவகுக்குகிறது. வயதானவர்கள் அதிகளவில் சளி, காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல், வைரஸ் பாதிப்பு, செரிமான பிரச்னைகள், மூட்டு வலி, சோர்வு போன்ற பாதிப்புக்கு எளிதாக ஆளாகின்றனர்.
n நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
n பொதுவாக மழைக்காலங்களில் தாகம் அதிகம் எடுக்காது என்பதால், பலர் தண்ணீர் அருந்துவது இல்லை. இதனால், உடலில் நீர்ச்சத்து குறைந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. தாகம் இல்லை என்றாலும் தண்ணீர் குடிக்கவேண்டும். கட்டாயம், தண்ணீரை காய்ச்சிதான் பருக வேண்டும்.n வீடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்காத வகையில், சுகாதாரமாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியால் டெங்கு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படலாம்.
n ஈரப்பதம் அதிகம் இருக்கும் காலை பொழுதில், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். நெஞ்சு பகுதி, காதுகள் நன்கு மூடப்பட்டு இருக்கவேண்டும். குளிர் காற்று நெஞ்சு பகுதியில் படுவதால், ரத்த ஓட்டத்தில் சீரற்ற தன்மை ஏற்படும். வெளியிடங்களுக்கு செல்லும் போதும், வாகனங்களில் செல்லும் போதும் காதுகளை நன்றாக மூடிக்கொள்வது நல்லது.
nபேனுக்கு அடியிலும், ஏ.சி.,க்கு நேராகவும் அமர்வதையும், உறங்குவதையும் தவிர்க்க வேண்டும்.
n சர்க்கரை, ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் உரிய மருந்துகளை, மருத்துவர்கள் அறிவுரைப்படி தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
n மழைக்காலங்களில் வழுக்கி விழும் முதியவர்கள் அதிகம். எனவே, வீட்டின் உள்ளும், வெளியிலும் ஈரமான இடங்களில் கவனமாக நடக்க வேண்டும்.
n பனி சற்று அதிகமாக இருந்தால், உடற்பயிற்சிக்கு வெளியில் செல்லாமல், வீட்டில் உள்ளேயே முடிந்த, உடல் இயக்க பயிற்சி மேற்கொள்ளலாம்.
Leave a Reply