பழங்குடியின மக்களுக்கு ரேஷன் கார்டு குடுத்தாச்சு! இருப்பிடத்துக்கே சென்று வினியோகம்

கோவை; கோவையில் உள்ள ஐந்து தாலுகாக்களுக்குட்பட்ட, மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களின் இருப்பிடத்துக்கே சென்று, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணிகளை,மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது.கோவை வடக்கு, மேட்டுப்பாளையம், பேரூர், மதுக்கரை, ஆனைமலை, வால்பாறை ஆகிய ஐந்து தாலுகாக்களில், மலைப்பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்களில் பெரும்பாலானோருக்கு, ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் இல்லை. இந்த தகவல், சமீபத்தில் வருவாய் மற்றும் வழங்கல்துறையினர் இணைந்து மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து, கலெக்டர் தலைமையில் மாவட்ட வருவாய் அலுவலர், அந்தந்த தாலுகா தாசில்தார்கள், மாவட்ட வழங்கல் அலுவலர், அதில் அங்கம் வகிக்கும் வழங்கல்துறை வட்ட வழங்கல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற, சிறப்புக்கூட்டம் நடந்தது.

கலெக்டர் அறிவுறுத்தல் இதில், கோவையிலுள்ள ஐந்து தாலுகா எல்லைக்குட்பட்ட மலைவாழ் வசிக்கும் பகுதிகளில், ஆய்வு மேற்கொள்ள வேண்டும், அவர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும் என்று, கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதையடுத்து வட்ட வழங்கல் அலுவலர், வருவாய் ஆய்வாளர்கள், வழங்கல்துறை துணை தாசில்தார்கள் அடங்கிய குழுவினர், மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில், எவ்வளவு குடும்பத்தினர் இருக்கின்றனர் என்ற விபரங்களை, மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள, மூப்பன் என்றழைக்கப்படும் ஊர் தலைவர் மற்றும் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தனர்.

திருமணமான தம்பதியர், குழந்தைகள் குறித்த விபரங்கள் சேகரித்தனர்.

ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு அதன் அடிப்படையில் திருமணச்சான்று, குழந்தைக்கான பிறப்பு சான்று ஆதார் அட்டை, ஆகியவற்றை வருவாய்த்துறை விதிமுறைகளின் படி தயாரித்து, அதனுடன் போட்டோக்களை எடுத்து இணைத்து, ஸ்மார்ட்கார்டு தயாரிக்கப்பட்டது.

இதன்படி, பொள்ளாச்சியை அடுத்த திம்மங்குத்து கிராமத்தில் வசிக்கும், 18 பேருக்கு முதற்கட்டமாக ஸ்மார்ட் ரேஷன்கார்டு தயாரிக்கப்பட்டது. அவற்றை கலெக்டர் நேற்று அம்மக்களுக்கு வழங்கினார்.

இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ”அடுத்த கட்டமாக மீதமுள்ள நான்கு தாலுகாக்களிலும், பணிகளை துவங்கி விரைவாக ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.