கோவை; கோவை அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் கட்டுகிறது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,621 கோடி. இதில், ரூ.15 கோடியில் ஐந்து இடங்களில் சுரங்க நடைபாதை அமைப்பதாக இருந்தது. திட்ட மதிப்பு 1791 கோடியாக உயர்த்தப்பட்டது. ஆனால், சுரங்க பாதைகள் மற்றும் சர்வீஸ் ரோடு அமைக்கும் திட்டம் நீக்கப்பட்டுள்ளது.’மெட்ரோ ரயில்’ திட்டத்தில் சுரங்கப்பாதைகள் அமைக்க இருப்பதால், ஒரே வேலைக்கு இரண்டு முறை செலவு செய்ய வேண்டாம் என்பதால் நீக்கியதாக, நெடுஞ்சாலை துறை சொல்கிறது.

‘மெட்ரோ’ திட்டத்துக்கு ஒப்புதல் கேட்டு, மத்திய அரசுக்கு இப்போது தான் திட்ட அறிக்கை அனுப்பி உள்ளனர். மத்திய அரசு அதற்கான நிதி ஒதுக்கி, டெண்டர் விட்டு, வேலை தொடங்கி, சுரங்க பாதை அமைக்க எத்தனை ஆண்டுகள் ஆகும் என்றே தெரியாது.
அதுவரை அவிநாசி ரோடை பயன்படுத்துவோர் கதி என்ன? மேம்பாலத்தின் கீழே ஏராளமான பஸ் ஸ்டாப்புகள் உள்ளன. மக்கள் ஒரு பக்கம் இருந்து மறுபக்கம் செல்வது எப்படி? போக்குவரத்து மிகுந்த இந்த ரோடை கடப்பது திடகாத்திரமான மனிதர்களுக்கே சிரமம். பெண்கள், முதியோர், குழந்தைகள் நிலை என்ன?
அதை உணர்ந்தே, தமிழக அரசு ஒப்புதல் அளித்த திட்ட அறிக்கையில் சுரங்க பாதைகளுக்கும், சர்வீஸ் ரோடுக்கும் நிதி ஒதுக்கியது. முந்தைய கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்த சிறப்பு சாலை பாதுகாப்பு கூட்டத்தில், சுரங்கப் பாதை அமைக்க வாய்ப்பில்லை என்றால், எஸ்கலேட்டர் அல்லது லிப்ட் வசதியுடன் கூடிய ஒரு நடை மேம்பாலம் அமையுங்கள்; பயன்பாட்டை பார்த்து விட்டு, மற்ற இடங்களில் அமைக்கலாம் என அறிவுறுத்தினார்.
இருந்தும், சர்வீஸ் ரோடு, சுரங்க பாதை நீக்கத்தால், பொதுமக்கள் மோசமாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், ‘கோயமுத்துார் கன்ஸ்யூமர் காஸ்’ அமைப்பு பொது நல வழக்கு தொடர தீர்மானித்துள்ளது. அதற்காக, நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அதில், ‘சுரங்க பாதை அமைப்பது கட்டாயம் என சாலை விதிகளில் கூறப்பட்டுள்ளது. கோவையில் மாதந் தோறும் 10 பேருக்கு குறையாமல் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். இரண்டரை ஆண்டுகளில் 238 பாதசாரிகள் பலியாகி உள்ளனர். பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதியை அரசு அதிகாரிகள் எவ்வளவு அலட்சியமாக புறக்கணிக்கின்றனர் என்பதற்கு இதுவே சாட்சி’.
‘சுரங்க பாதைகள் மற்றும் சர்வீஸ் ரோட்டை நீக்கியது, பொதுமக்கள் நலனுக்கு முற்றிலும் விரோதமானது. ஏற்கனவே திட்டமிட்ட ஐந்து இடங்களில் சுரங்க பாதை அல்லது நடை மேம்பாலம் லிப்ட் வசதியுடன் கட்ட வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அடிப்படையில், சர்வீஸ் ரோடு போட வேண்டும்’ என கூறப்பட்டுள்ளது.
அமைப்பின் செயலாளர் கதிர்மதியோன் கூறுகையில், ”கலெக்டரின் உத்தரவை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீறியுள்ளனர். இது, பொறுப்பற்ற அணுகுமுறை. காந்திபுரத்தில் மேம்பாலம் கட்டிய போதும் இப்படித்தான் நடந்து கொண்டனர். நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் முடிவுகளால், பொதுமக்களே பாதிக்கப்படுகின்றனர்,என்றார்.
Leave a Reply