பொள்ளாச்ச; ‘மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் இருந்த அதிகாரிகள், முதல்வர் வருகை எனக்கூறியதும் ரோடு சீரமைப்பு பணிகளில் தீவிரம் காட்டுவது கண்டனத்துக்குரியது,’ என, எம்.எல்.ஏ., ஜெயராமன் தெரிவித்தார்.பொள்ளாச்சி – உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், மரப்பேட்டை முதல் ஊஞ்சவேலாம்பட்டி வரை போக்குவரத்து வசதிக்காக கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு முன், 24 கோடியே, 77 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஆனால், இந்த ரோடு முறையான பராமரிப்பு இல்லாமல் விபத்துகள் நடக்கும் இடமாக மாறியுள்ளது. இந்த ரோட்டில் இருசக்கர வாகனங்கள், பொதுமக்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட சர்வீஸ் ரோடுகள் மோசமாக உள்ளன. ரோட்டின் இருபுறமும், மையத்தடுப்பிலும் புதர்கள் வளர்ந்து காணப்படுகிறது.
ரோடு மிக மோசமாகி, குண்டும், குழியுமாக மாறி விபத்துக்களை ஏற்படுத்துகிறது. மேலும், பயன்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்துமிடமாக இந்த ரோடு மாறியது.
கடந்த மாதம் முதல்வர் வருகையையொட்டி ரோடுகளில் பேட்ச் ஒர்க் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்வர் வருகை ரத்தானதால் புதர்கள் அகற்றம், ரோடுகள் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டன.தற்போது, மீண்டும் முதல்வர் வருவதாக அறிவிப்பு வெளியானதையடுத்து, மீண்டும் பொள்ளாச்சி – உடுமலை ரோட்டில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதிகாரிகளின் செயலுக்கு எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் கூறியதாவது:
முதல்வர் வருகிறார் என்றால், மையத்தடுப்புகளில் இருந்த மண் அகற்றப்படுகிறது. பேட்ச் ஒர்க் பணிகள் நடக்கிறது. அதே நேரத்தில், மக்கள் கோரிக்கை விடுத்த போது அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டசபையில் இது குறித்து வலியுறுத்தி பேசியும் பலன் இல்லை.
முதல்வர் பயணம் ரத்து எனக்கூறியதும் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது, மீண்டும் அவர் வருகிறார் எனக்கூறியதும் பணிகள் நடக்கிறது. இது மக்களுக்கான ஆட்சியாக தெரியவில்லை. மக்கள் மீது அவ்வளவு தான் அக்கறையா; இது தான் திராவிட மாடல்.
Leave a Reply