கோவை, ;கோவை லங்கா கார்னர் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து சிக்கலுக்கு தீர்வு காண, சோதனை முறையில், ‘ரவுண்டானா’ வடிவில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.கோவை பெரிய கடை வீதி மற்றும் கூட்ஸ் ஷெட் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், திருச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வரும் வாகனங்கள் லங்கா கார்னர் பகுதியில் சங்கமிக்கின்றன. அப்பகுதியை வாகனங்கள் கடக்கும்போது போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. ‘பீக் ஹவர்ஸ்’ சமயத்தில், வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தேங்க ஆரம்பித்து விடுகின்றன.
மாநில நெடுஞ்சாலைத்துறை சாலை பாதுகாப்பு குழு, லங்கா கார்னர் பகுதியை கள ஆய்வு செய்து, ‘ரவுண்டானா’ அமைக்க, பரிந்துரைத்தது. நெடுஞ்சாலைத்துறை நிதி ஒதுக்க தயங்கியதால், மாநகராட்சி நிர்வாகம் முன்வந்தது.
லங்கா கார்னர் பகுதியில் ஏற்கனவே இருந்த சாலை தீவு பகுதி இடிக்கப்பட்டு, தற்காலிகமாக, ‘ரவுண்டானா’ வடிவில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு, வாகனங்கள் அனுப்பப்படுகின்றன.
இனி இப்படித்தான்!
* பெரிய கடை வீதி, கூட்ஸ் ஷெட் ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் இடது புறம் திரும்பி, ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் பயணிக்கலாம்; ‘ரவுண்டானா’வை சுற்றி, திருச்சி ரோட்டுக்குச் செல்ல வேண்டும். பழைய சுரங்கப்பாதையில் முதலாவது வழியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் வருவோர், இடது புறம் திரும்பி, திருச்சி ரோட்டில் நேராக செல்லலாம்; பெரிய கடை வீதிக்குச் செல்ல வேண்டுமெனில், அரசு மருத்துவமனை முன் திரும்பி வந்து, லங்கா கார்னர் பழைய சுரங்கப்பாதை வழியாக செல்ல வேண்டும்.
* திருச்சி ரோட்டில் வரும் வாகனங்கள், ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்குச் செல்ல வேண்டுமெனில், ‘ரவுண்டானா’வை சுற்றிச் செல்ல வேண்டும். பெரிய கடை வீதிக்கு சுரங்கப்பாதை வழியாக நேராக செல்ல வேண்டும்.
* அரசு மருத்துவமனை முன்புள்ள முனையத்தில் இருந்து, பெரிய கடை வீதி வழியாக செல்ல வேண்டிய பஸ்கள், கீழுள்ள சுரங்கப் பாதையை பயன்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷன் ரோட்டுக்குச் செல்ல, ‘ரவுண்டானா’வை பயன்படுத்த வேண்டும்.
Leave a Reply