புத்தக கண்காட்சியில் ரூ.5.50 கோடிக்கு விற்பனை; வருகை குறைந்தாலும் வருமான உயர்வால் மகிழ்ச்சி

கோவை; கோவை கொடிசியாவில் நடந்த புத்தக கண்காட்சியில் 5.50 கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனை ஆனதாக, கண்காட்சி தலைவர் ராஜேஷ் தெரிவித்தார்.கோவை மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வி துறை, கொடிசியா இணைந்து நடத்திய புத்தக திருவிழா கொடிசியா வளாகத்தில் 10 நாட்கள் நடந்தது.

300க்கு மேற்பட்ட ஸ்டால்களில், தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்கப்பட்டன. 65 ஆயிரம் பேர் கண்காட்சியை பார்வையிட்டு, புத்தங்களை வாங்கி சென்றனர்.

கண்காட்சி தலைவர் ராஜேஷ் கூறியதாவது:
கோவை வாசகர்களின் ஆதரவால் பதிப்பாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டு விற்பனையை விட 50 லட்சம் ரூபாய் அதிகம்.

கடந்த ஆண்டு வந்த 70 ஆயிரம் பேருடன் ஒப்பிடும்போது, பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும், புத்தக விற்பனை தொகை அதிகரித்துள்ளது.

பள்ளி கல்லுாரி மாணவர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் வந்தனர்.

அடுத்த ஆண்டு மாணவர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளை அதிகரிக்க இருக்கிறோம். அவிநாசி ரோட்டில் இருந்து கொடிசியா அரங்கத்துக்கு பஸ் போக்குவரத்தும் அதிகரிக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.