அயோடின் கண்டறிய நடத்தப்பட்டது ‘உப்புசப்புள்ள’ ஆய்வு! 97 சதவீத மாதிரி அளவுகளில் திருப்தி

கோவை; தேசிய அயோடின் குறைபாடுகள் தடுப்பு திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டில் மாநிலத்தில் மொத்தம், 8,702 உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகளின் படி, 97 சதவீத உப்பு மாதிரிகளில், 15க்கு பி.பி.எம்., அளவுக்கு மேல் அயோடின் அளவு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.அயோடின் அளவு ஒரு கிலோ உப்பில், 15 மில்லிகிராம் அளவு அயோடின் இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருந்தால், அயோடின் போதுமான அளவு இல்லை என்பது பொருள்.

‘0’ பி.பி.எம்., என்பது அயோடின் கலக்கப்படாத உப்பு என்பதை சுட்டிக்காட்டுகிறது. 2024ல் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் படி, 3.1 சதவீதம் உப்பு மாதிரிகளில் 15 பி.பி.எம்., என்ற அளவை காட்டிலும் குறைவாக உள்ளதாகவும், 0.1 சதவீத மாதிரிகளில் அயோடின் கலக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

2025 மார்ச் 31 நிலவரப்படி, 4.1 சதவீத உப்பு மாதிரிகளில் குறிப்பிட்ட அளவை காட்டிலும் குறைவாக அயோடின் சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

கட்டுப்பாட்டில் நோய்கள் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அனுராதாவிடம் கேட்டபோது, ”தேசிய அயோடின் குறைபாடுகள் தடுப்பு திட்டத்தின் கீழ், உப்பில் அயோடின் சேர்க்கப்படுகிறது. இதனால், அயோடின் குறைபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. உப்பு மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. அயோடின் இல்லாமல் உப்பு விற்பனை செய்ய இயலாது. அயோடின் குறைபாடு காரணமாக, தைராய்டு, வளர் இளம் பெண்களிடம் வளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட நோய் பாதிப்பு ஏற்படுகிறது,” என்றார்.

‘உப்பில் அயோடின்

வீட்டில் சோதிக்கலாம்’

”பொதுமக்கள் எளிதாக வீடுகளிலேயே பரிசோதனை செய்யலாம். உருளைக்கிழங்கு மேல் உப்பை வைத்து அதன் மேல் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால், நீல நிறமாக மாறும். அவ்வாறு மாறினால் அயோடின் சத்து இருக்கிறது என்று பொருள். கல் உப்பாக இருந்தாலும் அயோடின் சேர்த்து தான் விற்பனை செய்யவேண்டும்,” என்றார் அனுராதா.