கோவை; அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி வளாகத்தின் முழுமையான கண்காணிப்புக்காக கேமராக்கள் நிறுவ வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதை செயல்படுத்த, பாதுகாப்பை உறுதி செய்ய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்றும், இரவில் வாட்ச்மேன்கள் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.மாவட்டத்தில் கிராமப்புறங்கள் மட்டுமல்லாது நகர்புறங்களில் இயங்கும் பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேமராக்கள் பொருத்தப்படவில்லை. ஒரு சில அரசு பள்ளிகளில் மட்டும், தனியார் பங்களிப்பில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பல பள்ளிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.கிராமப்புறப் பள்ளிகளில், விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் அத்துமீறி நுழைவது; விதிமுறைகளை மீறி விளையாட்டு மைதானத்தை உபயோகிப்பது; வகுப்பறை, வளாகத்திற்குள் மதுபாட்டில்களை உடைத்து வீசுவது; கழிப்பறைகளை சேதப்படுத்துவது தொடர்கிறது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டால் இத்தகைய சம்பவங்களைத் தடுக்க முடியும். மாணவர்கள் எண்ணிக்கையைப் பொறுத்து பள்ளிகளுக்கு வழங்கப்படும் எஸ்.என்.ஏ. நிதியிலிருந்து கேமராக்கள் வாங்கிக்கொள்ளலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், அது சாத்தியமில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.

இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ‘எஸ்.என்.ஏ. நிதியானது துாய்மைப் பொருட்கள் வாங்குவதற்கும், சிறிய பழுதுபார்ப்புகளுக்கும் மட்டுமே போதுமானதாக உள்ளது.
கேமராக்கள் போன்ற அதிக விலை கொண்ட உபகரணங்களை இந்த நிதியில் இருந்து வாங்க முடியாது. ஒப்பந்த அடிப்படையில் வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு நிலையான சம்பளம் போன்றவையும் அவசியம். தற்போது சில பள்ளிகளில் ஆசிரியர்களே தங்கள் சொந்தப் பணத்தில் பணியாளர்களை நியமித்து துாய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர்’ என்று தெரிவித்தனர்.
Leave a Reply