கோவை: ஈஷா யோகா மையத்தில் நேற்று மாலை 6 மணிக்கு துவங்கிய மகா சிவராத்திரி விழா, இன்று காலை 6 மணி வரை கோலாகலமாக நடைபெற்று முடிந்தது… இந்த மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கியப் பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் 31-வது ஆண்டு மகா சிவராத்திரி விழா நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கியது. இதில் பங்கேற்பதற்காகவே இந்தியா முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் கோவையில் குவிந்துவிட்டனர். இந்த சிவராத்திரி விழாவில் பங்கேற்பதற்காகவே, உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினமே கோவை வந்தார்..
சிறப்பு விருந்தினர் – நந்திக்கு தாமரை சிறப்பு விருந்தினராக மகா சிவராத்திரி விழாவில் கலந்து கொண்டார்.. ஈஷா யோகா மைய வளாகத்துக்கு வந்த அவரை, ஈஷா நிறுவனர் சத்குரு வரவேற்று, ஈஷா மையத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, இந்த இடங்களின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். இதையடுத்து, சூர்ய குண்டம், நாக சன்னதி ஆகிய இடங்களுக்கு சென்று வழிபட்ட மத்திய அமைச்சர் அமித்ஷா, அங்கிருந்த நந்திக்கு தாமரையை அர்ப்பணித்தார்.
பிறகு லிங்க பைரவி கோயிலில் வழிபட்ட அமித்ஷாவுக்கு, சத்குரு ருத்ராட்ச மாலையை அணிவித்தார். இதையடுத்து, தியானலிங்கத்தில் சத்குரு தலைமையில் நடந்த பஞ்சபூத க்ரியையில் பங்கேற்ற அமித்ஷா, அங்கிருந்து ஆதியோகி சிலை அமைந்துள்ள இடத்துக்கு வந்து, யோகேஸ்வர லிங்கத்துக்கு கைலாச தீர்த்தத்தை ஊற்றி, வழிபாடு நடத்தினார். தொடர்ந்து, மகா சிவராத்திரி விழாவுக்கான யாக வேள்வியை தொடங்கிவைத்தார்.
சத்குருவுக்கு பாராட்டு : அப்போது அமித்ஷா சிறப்புரையாற்றும்போது சத்குருவை பாராட்டி பேசினார். “ஒரு லட்சியத்தோடு இயங்கும் ஞானி சத்குரு.. அந்த அளவுக்கு சிறப்பாக பணியாற்றி கொண்டு இருக்கிறார்.. உலகத்தை மாற்ற வேண்டும் என்றால், முதலில் நம்மை மாற்ற வேண்டும் இதனை நமக்கு சத்குரு உணர்த்தி வருவதாக நான் நினைக்கிறேன். மண் காப்போம் இயக்கத்தில் சத்குரு எடுத்த முயற்சிகளுக்கு என்னுடைய பாராட்டுகள். ஆதியோகி தரிசனம் பெரும் பாக்கியம் எனக் கூறி, யோகா, தியானத்தால் ஈஷா பல லட்சம் மக்களை நல்வழிப்படுத்தி வருகிறார்” என்றார்.
இந்த நிகழ்வில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே.சிவக்குமார், ஆளுநர்கள் ஹரிபாபு கம்பஹம்பதி (ஒடிசா), குலாப் சந்த் கட்டாரியா (பஞ்சாப்), மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் சஞ்சய் ரதோட், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
ஒரே மேடையில் பங்கேற்பு :பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வரும் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணியும், இந்த விழாவில் அமித்ஷாவுடன் ஒரே மேடையில் பங்கேற்றார்.நள்ளிரவு தியானத்தில் உச்சரிக்கப்படும் திருவைந்தெழுத்து மகா மந்திரத்தை பக்தர்களுக்கு தீட்சையாக வழங்கிய சத்குரு “மிராக்கிள் ஆஃப் தி மைண்ட்” என்ற இலவச செயலியை அறிமுகப்படுத்தினார். ஈஷா வளாகத்தில் உள்ள விடுதியில் நேற்றிரவு தங்கிய அமித்ஷா, இன்று விமானப்படை ஹெலிகாப்டரில் புறப்பட்டு, கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து தனி விமானத்தில் உத்தரபிரதேசம் செல்கிறார்.
Leave a Reply