முதுகலை ஆசிரியர் பற்றாக்குறை; தேர்ச்சி விகிதம் பாதிக்கும் அபாயம்

கோவை; அரசுப்பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.மாநிலம் முழுவதும் 3,806 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.இதில், கோவை மாவட்டத்தில் 65 இடங்கள் காலியாக உள்ளன. ஓய்வு பெறும் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) 1,996 பணியிடங்களை நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. காலிப்பணியிடங்கள் 50 சதவிகிதம் நேரடி நியமனத்தின் மூலமும், மீதமுள்ள 50 சதவிகிதம் பதவி உயர்வு மூலமும் நிரப்பப்படும்.நீதிமன்ற வழக்கு காரணமாக, 2021ம் ஆண்டிலிருந்து முதுகலை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, 400க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்காககாத்திருக்கின்றனர். இதில் 300க்கும் அதிகமானோர் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆவர்.

முக்கிய பாடங்களில் பாதிப்பு

மாநில அளவில் தமிழ் -386, ஆங்கிலம் – 454, கணிதம் – 449, இயற்பியல் – 418, வேதியியல் – 393 போன்ற முக்கிய பாடங்களில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதால், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் நேரடியாக பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகியுள்ளது.

இதுகுறித்துமுதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கூறுகையில், ‘டி.ஆர்.பி. தேர்வு அறிவிப்பு வெளியானதால், முக்கிய பாடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை பி.டி.ஏ., மூலம் நிரப்ப சிரமம் ஏற்பட்டுள்ளது. தேர்வுக்குத் தயாராகவேண்டும் என்பதால், பலர் தற்காலிக பணியில் சேர விருப்பம் காட்டவில்லை.முக்கிய பாடங்களில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பது மாணவர் சேர்க்கையையும் பாதிக்கிறது. மேலும், ஓய்வுபெறும் ஆசிரியர்களின் இடங்கள் தொடர்ந்து காலியாகும் என்பதால், இந்த பற்றாக்குறை மேலும் கூடிக்கொண்டே செல்கிறது’ என்கின்றனர்.