ஹைடெக் லேப்களுக்கு வயரிங் செய்ய பள்ளி பராமரிப்பு நிதியை செலவிடுவதா? புலம்பித்தீர்க்கும் தலைமையாசிரியர்கள்

கோவை மாவட்டத்தில் 232 நடுநிலை, 83 உயர்நிலை மற்றும் 114 மேல்நிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களின் கணினி அடிப்படையிலான கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், மத்திய அரசின் நிதியுதவியுடன் இந்த பள்ளிகளில், அதிநவீன ஹைடெக் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த ஆய்வகங்களுக்கு இணைய வசதி அளிப்பதிலும், வயர் கேபிள் இணைப்பு கொடுப்பதிலும், நடைமுறை சிக்கல்கள் நிலவி வருகின்றன.

பள்ளி நிதி செலவு இந்நிலையில், ஹைடெக் ஆய்வகங்களுக்கான கேபிள் இணைப்புகளை, பள்ளி பராமரிப்பு நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.பொதுவாக, 100-க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு எஸ்.என்.ஏ., நிதியாக ரூ.25 ஆயிரமும், 100க்கும் அதிகமான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளுக்கு ரூ.50 ஆயிரம் என, பள்ளி பராமரிப்பு நிதியாக வழங்கப்படுகிறது.இந்த நிதியில் இருந்துதான், ஹைடெக் ஆய்வகங்களுக்கான கேபிள் இணைப்புகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டதால், தலைமையாசிரியர்கள் வேறு வழியின்றி, நிதியிலிருந்து கேபிள் இணைப்பிற்கு செலவு செய்துள்ளனர்.

ஒரு ஹைடெக் ஆய்வகத்திற்கு, ரூ.6.04 லட்சம் செலவில் 10 கணினிகள், ஹெட்செட், புரொஜெக்டர், யு.பி.எஸ், சேர் உள்ளிட்ட வசதிகளை, தனியார் நிறுவனமான கெல்ட்ரான் அமைத்துள்ளது.

பராமரிப்புக்கு என்ன செய்வது? ‘பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியில், 10 சதவீதம் தூய்மைப் பொருட்களுக்கும், மீதம் உள்ளதை பள்ளி மேம்பாட்டுப் பணிகளுக்கும் செலவு செய்ய வேண்டும். ஆனால், ஹைடெக் ஆய்வகங்களுக்கான கேபிள் இணைப்புக்கு, சில பள்ளிகள் 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளன.

ஆய்வகங்களுக்கு தேவையான கேபிள் இணைப்புக்காக, கணிசமான நிதி செலவழிக்கப்பட்டதால், தூய்மைப் பணிகள், சிறு பழுது நீக்குதல் போன்ற அத்தியாவசிய செலவுகளை எப்படி சமாளிப்பது’ என, தலைமையாசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.