மருதமலை முருகன் கோயிலில் வெள்ளி வேல் திருட்டு.. காவியுடை அணிந்த சாமியார் போலீஸில் சிக்கியது எப்படி?

கோவை: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்ற நிலையில், அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் இருந்து நான்கு லட்ச ரூபாய் மதிப்புடைய வெள்ளி வேல் ஒன்றை சாமியார் வேடத்தில் வந்த மர்ம நபர் திருடிய விவகாரத்தில், வெங்கடேச சர்மா என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
முருகனின் ஏழாம் படை வீடு என்று கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயில் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. மருதமலைக்கு பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.


பண்டிகை தினங்கள், பங்குனி உத்திரம், தைப்பூசம், கிருத்திகை, சஷ்டி தினங்களில் மருதமலை முருகன் கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வர். குடமுழுக்குக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், குடமுழுக்கு நாளுக்கு முந்தை தினம் அதாவது ஏப்ரல் 3 ஆம் தேதி கோவை மருதமலை கோவில் அடிவாரத்தில் உள்ள தனியார் மடத்தில் இருந்து தேதி வேல் ஒன்று திருடப்பட்டது. இரண்டரை கிலோ எடை கொண்ட வெள்ளியால் செய்யப்பட்ட அந்த வெள்ளி வேலின் மதிப்பு சுமார் 4 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் ஏராளமானோர் வந்து சென்று கொண்டிருந்த நிலையில் தனியார் மடத்தை குறிவைத்து காவி உடை அணிந்து வந்த நபர் ஒருவர் வெள்ளி வேலை திருடி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதுதொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வெள்ளி வேலை திருடி சென்ற நபர் திண்டுக்கல் மாவட்டம், சிறுமுகைப் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் சர்மா என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் வெங்கடேசன் சர்மாவை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி வேலை பறிமுதல் செய்தனர். மருதமலை அடிவாரத்தில் உள்ள இந்த மடம் தனியாருக்கு சொந்தமான மடம். ஆனாலும், கோயிலுக்கு வரக்கூடிய முருக பக்தர்கள் அங்கு தங்கி செல்வது வழக்கம். வெங்கடேச சர்மா கோவில்களுக்கு ஆங்காங்கே செல்லும் பொழுது இதுபோன்று ஆள் ஆரவாரம் மற்ற இடங்களில் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட வெங்கடேச சர்மாவை கோவை அழைத்து வந்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.