மலைப்பாதையில் மண் சரிவை தடுக்கும் ‘மண் ஆணி’

மேட்டுப்பாளையம், ; மேட்டுப்பாளையம் -கோத்தகிரி மலைப்பாதையில் மண் சரிவை தடுக்கும் ‘மண் ஆணி’ அமைக்கப்பட்டு வருகிறது.

கோடை சீசன் துவங்கியதை அடுத்து, நாள்தோறும் ஊட்டிக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மலர் கண்காட்சி மற்றும் ஊட்டி சீசன் துவங்கியதும், குன்னூர் வழியாக ஊட்டி செல்லும் அனைத்து வாகனங்களும், கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையம் வந்து சேரும் வகையில், ஒரு வழிப்பாதையாக அறிவிக்கப்படும்.
Latest Tamil News

மலைகள் மீது அதிக அளவில் மழை பெய்யும்போது, மண் சரிவு ஏற்படும். மண், பாறைகள், மரங்கள் ஆகியவை சாலையில் சரிந்து விழும் போது, போக்குவரத்து துண்டிக்கப்படும். பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் பெரிதும் பாதிக்கப்படுவர். மலைப்பகுதியில் ஏற்படும் நிலச்சரிவை தடுப்பதற்கு, தமிழக நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம், கோத்தகிரி சாலையில் மண் சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து ‘மண் ஆணி’ அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

முதல் கட்டமாக மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில், குஞ்சப்பனை அருகே, நான்கு மற்றும் ஐந்தாவது கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே, மூன்று இடங்களில் மண் ஆணி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:

மண் சரிவு ஏற்படும் இடங்களை தேர்வு செய்து, அந்த இடம் சுத்தம் செய்யப்படும். பின்பு இரண்டு மீட்டர் இடைவெளியில் 3 மீட்டர் ஆழத்திற்கு மலையில் துளை போட்டு, அதில் இரும்பு ராடு இறக்கி, அதை சுற்றி கான்கிரீட் கலவையும் நிரப்பப்படும். ஒரு இடத்தில், 20 மீட்டர் உயரம், 50 மீட்டர் நீளத்திலும், மற்ற இரண்டு இடங்களில், 16 மீட்டர் உயரம், 20 மீட்டர் நீளத்தில், இந்த மண் ஆணியானது அமைக்கப்பட்டு வருகிறது.

மலைச்சரிவில் பூமிக்குள் இருக்கும் தண்ணீரை இயற்கையாக வெளியேற்ற, ஆங்காங்கே பிவிசி பிளாஸ்டிக் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. சுத்தம் செய்த இடத்தில் உரம் கலந்த, வெட்டிவேர், லெமன் கிராஸ், மலை மீது வளரும் புல் ஆகியவற்றின் விதைகளை, காயர் கலந்து, கம்ப்ரஸர் வாயிலாக, மலை சரிவில் தெளிக்கப்படும். அந்த இடத்தில் மண் சரிவும், மண் அரிப்பும் ஏற்படாமல் இருக்க, மலை மீது கம்பி வளை பரப்பி, கீழே சரியாமல் இருக்க, மேலும் கீழுமாக, ‘யூ’ வடிவ கிளாம்ப் ஆணியால் இந்த வலைகளில் அடிக்கப்படும்.

கடந்த ஏப்ரல் 5ம் தேதி ஒரு பகுதியில், மண் ஆணி திட்டம் அமைத்து, விதைகள் விதைத்து கம்பி வளை அடிக்கப்பட்டது. அந்த இடத்தில் தற்போது அதிகளவில் புற்கள் வளர்ந்துள்ளன. மழை நீர் அதிக அளவில் வந்தாலும் இந்த புல் தரை வழியாக வழிந்தோடி விடும் வகையில் உள்ளது. இந்த இடத்தில் மண் சரிவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. மண் ஆணி திட்டமானது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இது முற்றிலும் வெற்றி பெற்றால், மலைப்பகுதியில் அதிக இடங்களில் மண் ஆணி அமைக்கப்படும். இவ்வாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறினர்.