கோவை; கோவையில் பாதசாரிகள் கடக்கும், ‘பெலிக்கன் கிராசிங்’ பகுதிகளில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்களை பொருத்த, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கோவையில் பாதசாரிகள் ரோட்டை கடக்க வசதியாக, பாதசாரிகளே இயக்கும் வகையில், பிரத்யேக ‘ஸ்மார்ட் சிக்னல்கள்’ ஏற்படுத்தப்பட்டன. இந்நடைமுறையில், பாதசாரிகள் ரோட்டை கடக்க, 30 – 40 வினாடிகள் வரை, கால அவகாசம் வழங்கப்படும்.

சில சமயங்களில், பாதசாரிகள் தொடர்ந்து சாலையை பயன்படுத்துவதால் காலஅவகாசம் அதிகரித்து, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சிகள் எதுவும் நடக்கவில்லை.
இந்நிலையில், ‘உயிர்’ எனும் தன்னாார்வ அமைப்பு வாயிலாக, சமீபத்தில் கல்லுாரி மாணவர்களுக்கான ‘ஹேக்கத்தான்’ நடத்தப்பட்டது. இதில், இரு புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் வழங்கினர்.
அதில் பாதசாரிகள் ரோட்டை கடக்கும் பெலிக்கன் கிராசிங்கில், ஏ.ஐ., தொழில்நுட்ப கேமரா பொருத்தும் கண்டுபிடிப்பு, பெரும் வரவேற்பை பெற்றது. இதையடுத்து, இத்தொழில்நுட்பத்தை சிக்னல்களில் அமைக்க, போக்குவரத்து போலீசார் திட்டமிட்டுள்ளனர்.கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் அசோக்குமார் கூறுகையில், ”சிக்னல்களில் ஏ.ஐ., தொழில்நுட்ப கேமரா பொருத்தப்படும்.
‘தெர்மல் இமேஜிங்’ முறையில் ஆட்கள் ரோட்டை கடப்பதை கணக்கிட்டு, சிவப்பு விளக்கு ஒளிரும். ஆட்கள் ரோட்டை கடக்காத போது, பச்சை விளக்கு ஒளிர்ந்து, வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்.
இதன் வாயிலாக, வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது.
பரீட்சார்த்த முறையில், இந்நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது. இத்தொழில்நுட்பம் வெற்றி பெற்றால், அனைத்து சிக்னல்களிலும் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால், சிக்னல்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் குறையும். போக்குவரத்து நெரிசல் தீரும்,” என்றார்.
தகவல் அறிய தொழில்நுட்பம்
ஹேக்கத்தானில் கல்லுாரி மாணவர்கள் கண்டுபிடித்த, நவீன தொழில்நுட்பம் கொண்ட மற்றொரு கருவி, ஆம்னி பஸ்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இக்கருவி, டிரைவர் மது அருந்தி உள்ளாரா, துாக்கக்கலக்கத்தில் பஸ்சை இயக்குகிறாரா, மொபைல்போனில் அல்லது அருகில் உள்ளவரிடம் பேசியபடி, கவனக்குறைவுடன் பஸ்சை இயக்குகிறாரா என்பது குறித்து அறிய உதவுகிறது. அவ்வாறு டிரைவர் விதிகளை மீறி பஸ்சை இயக்கினால், அதுகுறித்த தகவல் போக்குவரத்து போலீசாருக்கும், பஸ் உரிமையாளருக்கும் அனுப்பப்படும். உடனே டிரைவரை எச்சரித்து, பஸ்சை பாதுகாப்பாக இயக்க இந்த திட்டம் உதவும் என்கின்றனர் போக்குவரத்து போலீசார்.
Leave a Reply